அம்பையில் போட்டியிட அதிமுக திட்டம்? வெள்ளத்துரை தான் வேட்பாளரா? சீமானுக்கு ஏமாற்றம்!

  • சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவது உறுதி என்றும், தற்போது அதிமுகவில் இணைந்துள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தான் வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவார் என பேசப்பட்ட நிலையில் வெள்ளத்துரை களம் காண இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா. தேர்தல் முடிவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால் அம்பை தொகுதி காலியாக உள்ளது.

    Advertisement

    அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டி

    திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ள நிலையில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே அம்பை தொகுதியில் களமிறங்குவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதனால் அம்பை தொகுதியில் சீமான் பொது வேட்பாளராக களம் காண்பாரா? என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

    இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சீமான், பசியோடு இருக்கிறேன். பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வேன் என்று கூறினார். இரு கட்சிகளும் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்த நிலையில், இது குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலினிடம் கேட்ட போது, தேர்தல் அறிவிக்கட்டும், அப்போது அதுபற்றி பேசலாம் என்று சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமியும் இதே மாதிரியான பதிலை கூறினார்.

    Advertisement

    அதிமுக போட்டியிடுவது உறுதி?

    இரு கட்சிகளும் சீமான் கூறியதை மறுக்காத நிலையில், அவரது கருத்தை ஏற்கவும் இல்லை. இதற்கிடையே நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்ற்கு பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர் உள்பட 5 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தயாராக இருப்பதாக கூறியதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பேசும் போது, நடந்து முடிந்த 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படக்கூடாது.

    தோல்வி ஒரு பொருட்டல்ல. 2 ஆயிரம், 3 ஆயிரம் வாக்குகள் தான் கிடைக்கும் என்று தெரிந்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டனர். அதனால் இதனையெல்லாம் பொருட்படுத்தவேக் கூடாது. மக்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டும் என எண்ணி வாக்களித்துள்ளனர்" என்று கூறினாராம். இதனால், அம்பை தொகுதியில் அதிமுக போட்டியிடுவது உறுதி என்றே கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.

    Advertisement

    அம்பை தொகுதியில் வெள்ளத்துரை போட்டி?

    அதிமுக வென்ற தொகுதியில் அதிமுக போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று டிடிவி தினகரனும் கூறியிருந்தார். இதற்கிடையே, அதிமுகவில் நேற்று தன்னை இணைத்துகொண்ட காவல்துறை முன்னாள் அதிகாரி வெள்ளத்துரை அம்பாசமுத்திரத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளாரா? என்ற கேள்வியும் அரசியல் வாட்டாரத்தில் எழுந்துள்ளது. வெள்ளத்துரை, 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்'டாக அறியப்பட்டவர்.

    கடந்த 2024-ல் அவர் பணி ஓய்வு பெற்றார். 2026 சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வெள்ளைதுரை 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த நிலையில்தான் திடீரென வெள்ளத்துரை அதிமுகவில் ஐக்கியம் ஆகியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    வெள்ளத்துரை சார்ந்த சமுதாய வாக்குகள் அம்பை தொகுதியில் அதிகம் என்பதோடு, மக்கள் மத்தியில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக பெயர் பெற்றவர். இதனால், அவரை வேட்பாளராக நிறுத்துவது பற்றி அதிமுக தலைமை ஆலோசித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது

    English Summary

    It is confirmed that the AIADMK will contest the Ambasamudram by-election, and reports suggest that 'encounter specialist' Vellathurai—who has recently joined the party—will be fielded as its candidate. Meanwhile, it has already been confirmed that Seeman, the coordinator of the Naam Tamilar Katchi, will contest from the same constituency. While there was earlier talk of Seeman being projected as a 'common candidate,' it is now being reported that Vellathurai will enter the fray.