டீமை இறக்கும் வேலுமணி! அதிமுக அடியோடு உடைகிறது! தவெக பக்கம் சாய்கிறதா 28 எம்.எல்.ஏ.க்கள் படை?

  • சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மிக அபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.

    Advertisement

    அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாகத் திகழும் அதிமுக, இரண்டு இடங்களிலும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு மிகக் கடுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவு வெளிவந்த சூடு தணிவதற்குள், அதிமுகவுக்குள் தலைமை மாற்றத்திற்கான குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டன. கட்சியின் மூத்த தலைவர்கள் எடுத்த அதிரடி முடிவுகள், எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவிக்கே பெரும் சவாலாக மாறியுள்ளன.

    Advertisement

    தேர்தல் களம் தந்த அதிர்ச்சி முடிவு

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் முன்பு சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். தவெக சார்பில் அவர்கள் மீண்டும் களமிறக்கப்பட்ட நிலையில், மக்கள் அவர்களுக்கு அமோக ஆதரவை அளித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.

    திமுக இரண்டாவது இடத்தைப் பிடித்தாலும், அதிமுக படுதோல்வி அடைந்து மூன்றாம் இடத்திற்குச் சென்றது அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல்களில் தோல்வி அடைந்து வரும் அதிமுக, இந்த இடைத்தேர்தலிலும் படுதோல்வி அடைந்திருப்பது கட்சியின் எதிர்காலம் குறித்த கவலையைத் தலைவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பின்னணியில் காய் நகர்த்திய 'மூவர் கூட்டணி'

    இந்தத் தேர்தல் தோல்வி எதிர்பாராத ஒன்று அல்ல; மாறாக திட்டமிட்ட ஒரு அரசியல் காய்நகர்த்தல் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதிமுகவின் அசைக்க முடியாத தூண்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூவரும் கடந்த சில வாரங்களாகவே ரகசிய ஆலோசனைகளை நடத்தி வந்துள்ளனர்.

    கட்சியில் ஒற்றைத் தலைமையின் கீழ் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் தன்னிச்சையான முடிவுகளால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது என்பது இந்த மூத்த தலைவர்களின் நீண்ட நாள் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், இந்த இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக, தேர்தல் களத்தில் தவெக வேட்பாளர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தந்து, எடப்பாடி பழனிசாமியின் முகாமிற்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர்.

    Advertisement

    அக்டோபர் 11 முதல் தீவிர பேச்சுவார்த்தை

    இடைத்தேர்தல் முடிவுகள் தங்களின் திட்டப்படியே அமையவும், இந்த 'மூவர் கூட்டணி' வெளிப்படையாகவே அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அக்டோபர் 11 முதல் இவர்கள் தீவிரமான ஆலோசனைகளிலும் சமரசப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது பிரதான திட்டம் என்னவென்றால், அதிமுகவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுத்து, சட்டமன்றத்தில் தனி அணியாகச் செயல்படுவது அல்லது தவெகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதுதான்.

    சட்டப்படி கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், மொத்தமுள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. தற்போது அதிமுகவிடம் 41 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு பலம் பெற வேண்டும் என்றால் குறைந்தது 28 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

    Advertisement

    இதற்காக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தனித்தனியாகத் தொடர்புகொண்டு பேசி வருகின்றனர். "கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் தலைமை மாற வேண்டும்; மக்கள் செல்வாக்கு உள்ள புதிய அரசியல் சக்திகளுடன் கைகோர்க்க வேண்டும்" என்று அவர்கள் எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கி வருவதாகத் தெரிகிறது. இதுவரை பல எம்.எல்.ஏ.க்கள் இவர்களது திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தவெக எம்எல்ஏக்கள் 20 பேர் அதிமுகவுக்கு வருகிறார்கள்.. செங்கோட்டையனுக்கு எடப்பாடி பதிலடி

    தலைமை மாற்றத்திற்குப் புதிய அஸ்திரம்

    அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் பிடியைத் தளர்த்த இதுவே சரியான தருணம் என்று இந்த மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். சட்டசபையில் 28 எம்.எல்.ஏ.க்களின் பலத்தை நிரூபித்துவிட்டால், எடப்பாடி பழனிசாமியால் இவர்களைக் கட்சியிலிருந்து நீக்க முடியாது. மேலும், சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவியையும் எடப்பாடி இழக்க நேரிடும்.

    Advertisement

    இதன் மூலம் கட்சியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பொதுக்குழுவைக் கூட்டி புதிய ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்குவதே இவர்களின் இறுதி நோக்கம். மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சட்டமன்றத்தில் வெளிப்படையான ஆதரவை வழங்குவதன் மூலம், புதிய அரசியல் அதிகாரப் பங்கீட்டை உறுதி செய்யவும் இவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

    ஆதவ் அர்ஜுனாவின் கட்சி பதவி.. அதிமுக கிளைச் செயலாளர் பதவிக்கு சமம்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தத்தளிக்கும் எடப்பாடி முகாம்

    இந்தத் திடீர் திருப்பத்தால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இடைத்தேர்தல் தோல்வி ஒருபுறம் வேதனையைத் தந்தாலும், சொந்தக் கட்சியின் மூத்த தளபதிகளே தனக்கு எதிராகத் திரும்பி 28 எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயற்சிப்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

    தங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறிவிடாமல் இருக்க எடப்பாடி தரப்பும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியும், இடைத்தேர்தல் தோல்வியும் மூத்த தலைவர்களின் கைக்கு கூடுதல் பலத்தைத் தந்துள்ளது.

    அதிமுக யாருடைய கட்டுப்பாட்டுக்குள் செல்லப் போகிறது? எடப்பாடி பழனிசாமி இந்தச் சூறாவளியைச் சமாளிப்பாரா அல்லது 28 எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் மூவர் கூட்டணி தலைமையைக் கைப்பற்றுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். தமிழ்நாட்டு அரசியல் களம் இதுவரை இல்லாத அளவிற்குப் பெரும் திருப்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

    English Summary

    AIADMK Political Crisis: SP Velumani, CV Shanmugam Secret Talks With TVK; EPS Leadership Under Severe Threat