கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!

  • சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவதற்கு பொருளாதார சிக்கலும் ஒரு காரணம் என்று தெரிய வந்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அதிமுக சார்பாக போட்டியிட்ட நிர்வாகிகள் பலரும் ஃபைனான்சியர்களிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்று செலவு செய்துள்ளனர். ஆனால் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், ஃபைனான்சியர்களின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஆளுங்கட்சி பக்கம் அதிமுகவினர் நகர்ந்து வருவதாக பேச்சுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் ஆளுங்கட்சியான தவெக நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இந்த திடீர் கட்சித் தாவல்களுக்குப் பின்னால் மிகப்பெரிய 'பொருளாதாரச் சிக்கல்' மற்றும் கடன் நெருக்கடி ஒளிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தேர்தல் செலவுகளுக்காக ஃபைனான்சியர்களிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் நிர்வாகிகள், தங்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகவே ஆளுங்கட்சி பக்கம் தஞ்சமடைந்து வருவதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன. தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் களமிறங்கினர்.

    தேர்தலில் வென்றுவிடலாம் என்ற முனைப்பில், பல முக்கிய நிர்வாகிகள் தங்களின் சொந்த சொத்துக்களைப் அடமானம் வைத்தும், அரசியல் ஃபைனான்சியர்களிடம் கோடிக்கணக்கில் வட்டிக்குப் பணம் பெற்றும் தேர்தல் களத்தில் வாரி இறைத்துச் செலவு செய்துள்ளனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான போது அதிமுக எதிர்பாராத பலத்த அடியை சந்தித்ததுடன், 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு பின்னடைவைச் சந்தித்தது.

    Advertisement

    தேர்தல் தோல்விக்குப் பிறகு, பணம் கொடுத்த ஃபைனான்சியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களின் அசலையும் வட்டியையும் உடனடியாக திருப்பி தருமாறு அதிமுக நிர்வாகிகளுக்குக் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஃபைனான்சியர்களின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவும் ஒரே வழி ஆளுங்கட்சியான தவெகவில் இணைவதுதான் என்று பலரும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆளுங்கட்சியான தவெக-வில் இணைவதன் மூலம் தங்களின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் குறைத்து கொள்ள முடியும் எனப் பல அதிமுக விஐபிக்கள் கணக்கு போடுகின்றனர். அதிமுகவில் நிர்வாக பொறுப்பில் மட்டும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோரின் நிலை இதுதான்.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெல்லுமா என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. சீனியர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் பலரும் தவெக நோக்கி நகர்வதால், அவர்களை பின்பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் சாரை சாரையாக செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பே ஆட்டம் கண்டுள்ளது.

    English Summary

    AIADMK: Pushed to 3rd Place, AIADMK Executives Seek Safe Haven in TVK to Escape Multi-Crore Election Debts