சின்னம்மா வர்றாங்க.. கூடவே டிடிவி! இணையும் அதிமுக.. யோசிக்கும் எடப்பாடி? கார்டனில் பரபர மீட்டிங்!


  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அதிமுகவில் முக்கியமான அரசியல் மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியால் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற, நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மீண்டும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுவது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக பெரும் சக்தியாக இருந்து வந்த அதிமுக, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த நிலையில், கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால் கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளைச் சேர்ந்த பல நிர்வாகிகள், கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அதிமுக

    குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்னணியில் உள்ள காரணங்களும் முக்கியமானவை. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் கட்சியின் அமைப்பு பலவீனமடைந்துள்ளதாக கூறப்படும் சூழலில், பழைய ஆதரவு வட்டாரங்களை மீண்டும் ஒருங்கிணைப்பது அவசியம் என்ற கருத்து கட்சிக்குள் வலுப்பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    இதற்கிடையே, "அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து தஞ்சாவூரைச் சேர்ந்த நிர்வாகி மகேந்திரன் உயிரிழந்த சம்பவமும் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, கட்சியின் எதிர்காலம் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    போயஸ் கார்டன்

    அதன் தொடர்ச்சியாக, பிரிந்த தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் பணிகள் மறைமுகமாக தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் வழியாக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா தரப்பினரும் சமீபத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சசிகலா

    இதில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அதிமுகவில் மீண்டும் இணையும் சூழல் உருவானால், சசிகலாவுக்கு முக்கியமான பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் அவரது ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவைத்தலைவர் போன்ற உயர்மட்ட பொறுப்பை வழங்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    டிடிவி தினகரன்

    மறுபுறம், டிடிவி தினகரன் தரப்பும் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அதிமுக அமைப்பில் புதிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள பதவிகளை விட கூடுதலாக பல துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை உருவாக்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இளம் தலைமுறை

    அதே நேரத்தில், கட்சியின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளில் இளம் தலைமுறையினர் குறைவாக இருப்பதாக கட்சிக்குள் கருத்து நிலவுகிறது. இதனால் இளைஞர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இடைத்தேர்தல்

    வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களே தற்போது அதிமுக தலைமைக்கு மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தால், கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும் என்றும், மாற்றுக் கட்சிகளுக்கு செல்லும் நிர்வாகிகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த முடியும் என்றும் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    சசிகலா - தினகரன்

    இதனால், சசிகலா - தினகரன் உள்ளிட்ட பிரிந்த தலைவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சி வெறும் வதந்தியா அல்லது உண்மையான அரசியல் திட்டமா என்பது வரும் நாட்களில் தெளிவாகும். ஆனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் எழுச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் அதிமுக தலைமைக்கு ஏற்பட்டிருப்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    English Summary

    Speculation grows over Sasikala and TTV Dinakaran rejoining AIADMK as leadership weighs major restructuring plans.