கப்பல்ல வேலைனு சொல்லி.. வேலுமணி மீது அதிருப்தி! வண்டியை எடப்பாடி பக்கம் திருப்பும் 7 எம்எல் ஏக்கள்

  • சென்னை: தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் அதிமுக தரப்பு விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தது. இந்த நிலையில் அவர்களின் ஒருவரின் பெயர் கூட தமிழக அமைச்சரவை விரிவாக்க பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் எஸ்பி வேலுமணி தரப்பு மீது அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் சிலர் மீண்டும் எடப்பாடி தரப்புக்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசியலில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்றால் அது அதிமுகவின் உட்கட்சி மோதல் தான். 2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு ஏற்கனவே சிக்கலில் இருந்த அதிமுகவில், தற்போது எஸ்.பி.வேலுமணி அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றன.

    Advertisement

    இதற்கிடையில், தவெக அரசு அமைந்த பிறகு அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எடுத்த அரசியல் முடிவுகளும் தற்போது அவர்களுக்கே சிக்கலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்தபோது, முழுமையான பெரும்பான்மை இல்லாத நிலை இருந்தது.

    எடப்பாடி பழனிசாமி

    அதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு மிகவும் அவசியமான சூழல் உருவானது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த பிறகே ஆட்சி அமைக்கப்பட்டது. அதேநேரத்தில், அதிமுகவிலும் பெரிய பிளவு உருவாகி இருந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான சில எம்.எல்.ஏக்கள், சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    Advertisement

    அதிமுக அதிருப்தி

    இந்த ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியது. அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்தவர்கள், திடீரென விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்போது ஒரு பேச்சு அரசியல் வட்டாரங்களில் ஓடிக் கொண்டிருந்தது. "அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி அணிக்கு முக்கிய இடம் கிடைக்கப் போகிறது" என்பதுதான் அந்த தகவல். குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த சிலர் அமைச்சர்களாக வரலாம் என்றும், சில முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் கூட வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

    இதற்காக தவெக தரப்பும் அதிமுக அதிருப்தி அணியும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் நல்ல முன்னேற்றம் இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகுதான் கதை மாற ஆரம்பித்தது. தவெக கூட்டணியில் இருந்த இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. "அதிமுக முன்னாள் அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது" என்று அவர்கள் நேரடியாகவே அழுத்தம் கொடுத்தனர்.

    Advertisement

    விஜய்

    குறிப்பாக, ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கொடுத்தால் அது தவெக அரசுக்கு நல்லதல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதனால் தவெக தலைமையும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஒரு பக்கம் அதிமுக அதிருப்தி அணியின் ஆதரவு தேவை. இன்னொரு பக்கம் கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்த வேண்டும். இந்த இரண்டுக்கும் நடுவில் விஜய் தரப்பு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அமைச்சரவை பட்டியல்

    இறுதியில் வெளியான அமைச்சரவை பட்டியலில், தவெக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இடம் வழங்கப்பட்டது. அதிமுகவிலிருந்து ஆதரவு தெரிவித்த ஒருவரின் பெயர்கூட பட்டியலில் இடம்பெறவில்லை. இதுதான் தற்போது பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, "நாம் இபிஎஸ்ஸை எதிர்த்து தவெக பக்கம் சென்றோம். ஆனால் இறுதியில் எதுவும் கிடைக்கவில்லை" என்ற மனநிலை சில எம்.எல்.ஏக்களிடம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

    Advertisement

    கே.பி.அன்பழகன்

    இதன் காரணமாக, எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த சில எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதலில் 2 அல்லது 3 பேர் மட்டுமே திரும்புவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் பாலக்கோடு தொகுதி எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ மரகதம் வெற்றிவேல் ஆகியோரின் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன.

    இபிஎஸ் அணி

    "அமைச்சரவை பதவியும் கிடைக்கவில்லை.. கட்சியிலும் பிரச்சனை.. தொகுதியிலும் எதிர்ப்பு" என்ற நிலை சில எம்.எல்.ஏக்களை மீண்டும் இபிஎஸ் அணிக்கு தள்ளிவருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மற்றொரு பக்கம், எடப்பாடி பழனிசாமியும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிமுகவில் ஏற்பட்ட பிளவை சரி செய்து, மீண்டும் அனைவரையும் ஒரே அணிக்குள் கொண்டு வர முயற்சி நடக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களில் அதிமுக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    English Summary

    Discontent grows in SP Velumani camp after cabinet snub, with several AIADMK MLAs reconsidering support.