சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த பிறகு மீண்டும் ஒரு பிளவு உருவாகியிருக்கிறது. எடப்பாடி தலைமையில் ஒரு எம்எல்ஏக்கள் குழுவும், சி.வி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு எம்எல்ஏக்கள் குழுவும் செயல்பட்டு வருகிறது அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. அதிமுகவை பொருத்தவரை பிளவுகளும், அணிகளும் உருவாவதும் ஒன்று புதிது கிடையாது. 55ஆண்டுகால அரசியல் பயணத்தில் அதிமுக இதுபோன்ற பல பிளவுகளை சந்தித்து இருக்கிறது. அவை என்னென்ன? வரலாறு என்ன சொல்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய மக்கள் இயக்கம் என்றால் அது அதிமுக தான். 1972ல் எம்ஜிஆரால் துவங்கப்பட்ட இந்த இயக்கம் தமிழகத்தை அதிக முறை ஆண்ட கட்சி என்ற பொறுமையை பெற்றிருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து இது சட்டப்பேரவைத் தேர்தல்களில் வென்று இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த கட்சி என்ற பொறுமையையும் அதிமுக பெற்று இருக்கிறது ஆனால் இப்போது அதன் நிலைமை பரிதாபகரமாக இருக்கிறது. சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். மேலும் சில முன்னாள் அமைச்சர்கள் போர் கொடி தூக்கியிருக்கின்றனர். அதிமுக, இப்போது மட்டுமல்ல 54 ஆண்டு கால அரசியல் பயணத்தில் பல்வேறு பிளவுகளையும், உட்கட்சி மோதல்களையும் சந்தித்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலேயே இந்த பிளவு தொடங்கியது என்பது தான் வரலாறு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த பிளவு உச்சத்தை தொட்டது. 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் அந்த கட்சியின் பழைய வரலாற்றை புரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினர். கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அதாவது 5 ஆண்டுகளில் 1977 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார். எம்ஜிஆரின் வசீகரம் அதிமுகவின் மிக வேகமாக வளர வைத்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் அந்த கட்சி ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆரம்ப காலத்தில் வேகமாக வளர்ந்தாலும் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகளும் உருவாகின. எம்ஜிஆர்க்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக இருந்த எஸ்டி சோமசுந்தரம் கட்சியின் முக்கிய தலைவராகவும் அமைச்சராகவும் வலம் வந்தார். இதற்கிடையே அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுகவிலிருந்து 1984 இல் நீக்கப்பட்டார். நமது கழகம் என்ற தனிக் கட்சியைத் தொடங்கி சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். ஆனால் அதிமுக வரலாற்றில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது எம்ஜிஆர் மறைவுக்கு பிறகுதான். 1987 டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அதிமுக இரண்டு அணிகளாக உடைந்தது. எம்ஜிஆரின் மனைவி ஜானகி தலைமையிலும், மறுபுறம் ஜெயலலிதாவின் தலைமையிலும் அணிகள் உருவாகின. இரு தரப்பும் தாங்கள்தான் கட்சியின் வாரிசு என உறுதியாகச் சொன்னார்கள். அப்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டப்பேரவை வளாகம் மோதல் களமாக மாறியது. இறுதியில் ஜானகி அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1989 சட்டமன்ற தேர்தலில் இரு அணிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஜெயலலிதா சேவல் சின்னத்திலும், ஜானகி இரட்டை புரட்சி இடத்திலும் போட்டியிட்டனர். ஜெயலலிதா அணி 27 இடங்களிலும், ஜானகி அணி இரண்டு இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றது. இதை அடுத்து அதிமுகவின் அடுத்த வாரிசு ஜெயலலிதா என சொல்லி அணிகள் ஒன்றிணைந்தது. ஜானகி விடைபெற்றார். கட்சி ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஜெயலலிதா தலைமையிலும் கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகின. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை கையாண்டதால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எம்ஜிஆர் கழகத்தை தொடங்கினார். இதேபோல அப்போது திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து விலகி தனிக் கட்சியைத் தொடங்கினார். பின்னர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்த அவர் மீண்டும் வெளியேறி, எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் பாஜகவில் இணைந்த இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். இடையில் பல அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் சேர்வதும் மீண்டும் அதிமுகவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக எதிர் கொண்ட பிளவு அந்த கட்சியின் எதிர்காலத்தை புரட்டி போட்டது. 2016 டிசம்பர் ஜெயலலிதா உயிரிழந்த போது ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். சில வாரங்களில் சசிகலா முதலமைச்சராக முயற்சி செய்த நிலையில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கினார். சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக திரும்பினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பு 11 எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் அதிமுக மீண்டும் இரண்டாக உடைந்தது. 2017 ஆகஸ்டில் ஓபிஎஸ்-ம் எடப்பாடியும் ஒன்று சேர்ந்தனர். ஓபிஎஸ் துணை முதலமைச்சராகவும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றார். ஆனால் அந்த இணைப்பு நீண்ட காலம் நிலைக்கவில்லை. இதற்கு இடையே டிடிவி தினகரன் சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். எடப்பாடி அரசுக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஆளுநரை சந்தித்து வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். இதனால் அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கி உடைந்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமான நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைப்பற்றி ஓபிஎஸ்ஐ வெளியேற்றினார். ஓபிஎஸ் தலைமையில் வைத்தியலிங்கம், ஜேசிபி பிரபாகர், மனோஜ் பாண்டியன், உள்ளிட்டோர் அணி திரண்டனர். இதனால் மேலும் அதிமுக பலவீனமடைந்தது. 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுக பிரச்சனைகளை சந்திப்பதை நிறுத்தவில்லை. 47 இடங்களில் வென்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. தமிழக வெற்றி கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதற்கிடையே அதிமுக திமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தகவல் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சிவிஜயபாஸ்கர், எம் ஆர் விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளூர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதற்கு முன்னதாக செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அவர்களும் தவெகவில் இணைந்தனர். தற்போது வேலுமணி, சிவி சண்முகம் தரப்பு தனி அணியாக செயல்படுகிறது. இப்படி அதிமுகவின் 54 ஆண்டு கால வரலாற்றை திருப்பிப் பார்த்தால் அந்த கட்சி பிளவை சந்தித்தது புதிதல்ல என்பது தெளிவாகும். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி ஜெயலலிதா, ஜெயலலிதா தலைமையில் சில பிளவுகள், அதற்கு பிறகு சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ், செங்கோட்டையன், என ஒவ்வொரு காலகட்டத்திலும் அதிமுக சோர்வடைந்தாலும் அது மீண்டும் வந்திருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் வலுவான தொண்டர் கட்டமைப்பும் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்த வாக்கு வங்கியும் தான். தற்போது அந்த இரு பெரும் தலைவர்கள் இல்லாத நிலையில் அதிமுகவின் புதிய தலைமுறை அந்த கட்சியை மீட்டெடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கான பதில் விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் ,அடுத்தடுத்து நடக்க இருக்கிற தேர்தல்களிலும் தெரிந்து விடும் என்கின்றனர்.