விசுவாசமா இருப்பேன்”.. அதிமுக to தவெகவுக்கு தாவிய சிங்கை ராமச்சந்திரன்.. வைரலாகும் பழைய வீடியோ!

  • சென்னை: அதிமுகவில் ஐ.டி விங் மாநிலச் செயலாளர், மாணவர் அணி மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த சிங்கை ராமச்சந்திரன், முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், சிங்கை ராமச்சந்திரன் ஜெயலலிதாவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவி வருகின்றனர். அந்தவகையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்து அண்மையில் விலகிய சிங்கை ராமச்சந்திரன் தவெகவில் இணைந்துள்ளார்.

    Advertisement

    அதிமுக மாணவரணி மாநில செயலாளராகச் செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். அதற்கு முன்பு, அதிமுக ஐடி விங் தலைவராகவும், மண்டல செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். ராமச்சந்திரனின் தந்தை சிங்கை கோவிந்தராசுவும் அதிமுகவில் தனது மறைவு வரை செயல்பட்டவர். எம்.எல்.ஏவாக இருந்தவர். ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் அதிமுகவில் இணைந்திருந்தார்.

    ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவரது தலைமையில் பணியாற்ற வேண்டும் என்பதையே கனவாக நினைத்து படித்து, ஜெயலலிதாவின் கவனத்தைப் பெற்று அதிமுகவில் இணைந்தவர் சிங்கை ராமச்சந்திரன். அண்மையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சிங்கை ராமச்சந்திரன். இந்நிலையில் அவர் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

    Advertisement

    கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டிருந்தார் சிங்கை ராமச்சந்திரன். அதிமுக மாணவர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த அவர், கடந்த ஜூலை 23 ஆம் தேதி அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். தனது முடிவை அப்போது சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.

    இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 11) தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைந்தார். தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய்யை நேரில் சந்தித்து, அக்கட்சியில் அவர் இணைந்தார். "தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்" என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் சிங்கை ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், சிங்கை ராமச்சந்திரன் ஜெயலலிதாவை சந்தித்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ வைரலாகி வருகிறது. 2016 மார்ச் 21 அன்று, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் சிங்கை ராமச்சந்திரன். அப்போது ஜெயலலிதா அவரிடம், "உங்க அப்பாவை எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவர் கட்சிக்கு மிகவும் விசுவாசமாக இருந்தார். நீங்களும் அவரைப் போல இருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

    அதற்கு சிங்கை ராமச்சந்திரன், "அப்பா மாதிரியே விசுவாசமா பணியாற்றுவேன்" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அந்த பழைய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Singai Ramachandran, who previously held positions such as State Secretary of the IT Wing and State Secretary of the Student Wing within the AIADMK, has joined the TVK in the presence of leader Vijay. Amidst this, a video of Singai Ramachandran meeting Jayalalithaa is going viral.