சென்னை: அதிமுக தலைமை மற்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி நாளைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பை ஏற்று சங்ககிரி தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் தங்கமணி - எடப்பாடி இடையே இருந்த விரிசல் முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்கின்றனர்.
தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அதிமுகவின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு மட்டுமல்லாமல், அதன் பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகார மோதல்களும் அதிமுகவை சிக்கலான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளன.
2026 தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து சில மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர். பின்னர் சமரச முயற்சிகள் நடந்தாலும், அனைவரும் முழுமையாக ஒரே அணியில் செயல்படுகிறார்களா என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி பல நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சிலருக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், முக்கியமான சில தலைவர்கள் இன்னும் முழுமையாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் எஸ்.பி. வேலுமணியும், நாமக்கல் மாவட்டத்தில் தங்கமணியும், விழுப்புரத்தில் சி.வி. சண்முகமும் அண்மைக்காலமாக கட்சி நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்கவில்லை என்பது அதிமுகவில் பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த தலைவர்கள் அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசித்து வருகிறார்கள் என்ற பேச்சு மீண்டும் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான தங்கமணி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கழக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த அமைப்புச் செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் தங்கமணி ராஜினாமா செய்வதாக கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி இருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரி பகுதியில் உள்ள அவரது நினைவுச் சின்னத்திற்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் செல்வார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி நாளைய தினம் சங்ககிரி பகுதியில் உள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திற்கு சென்று மரியாதை செலுத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் தங்கமணி. கொங்கு மண்டலத்தில் பிரச்சனை வரும் போதெல்லாம் தங்கமணியும் வேலுமணியும் தான் எடப்பாடிக்கு ஆதரவாக நின்றனர். தற்போது தங்கமணியின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பறித்த நிலையில் அந்தப் பதவியை மீண்டும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளாராம். அதனால் தான் தங்கமணி தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார் என்கின்றனர்.அதிமுக
தங்கமணி
எடப்பாடி பழனிச்சாமி
தீரன் சின்னமலை
மீண்டும் அதிமுக