சென்னை: சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் விஜய் பேசிய பேச்சிற்கு அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக சட்டசபை சர்க்கஸ் கூடாரமாக மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளது.
தவெக ஆட்சி அமைத்த பின் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நிறைவடைந்தது. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதலமைச்சர் எஸ். ஜோசப் விஜய் சுமார் 45 நிமிடங்கள் அவையில் விரிவான மற்றும் அதிரடியான பதிலுரையை வழங்கினார்.
இந்த பதிலுரையில் விஜய்யின் சினிமா பயணம் தொடங்கி நட்சத்திர நடிகராக மாறியது வரையிலும், பின்னர் அரசியல் பயணம் முதல் ஆட்சியை பிடித்தது வரையிலும் பேசினார். அதுமட்டுமல்லாமல் கொளத்தூரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் தோல்வியை நக்கல் செய்த முதல்வர் விஜய், ஃபினிஷ்டு சைகையை காட்டி இருக்கையில் அமர்ந்தார். அப்போது திமுக சட்டசபையில் இருந்து ஏற்கனவே வெளிநடப்பு செய்திருந்தது. முதல்வர் விஜய் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், எந்தக் கட்சி நிதி பெறுகிறது என்பதையும் தைரியமிருந்தால் சொல்ல சொல்லியும் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருந்தார். இன்றைய சட்டசபை நிகழ்வுகளை எடப்பாடி பழனிசாமி வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தார். விஜய் சொன்ன குட்டிக்கதையை எடப்பாடி பழனிசாமி ரசித்து சிரித்தார். இந்த நிலையில் சட்டசபை நிகழ்வுகளை வைத்து அதிமுக ஐடி விங் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், சர்க்கஸ் கூடாரமான சட்டசபை என்றும், பொய்க்கால் குதிரை அரசு என்று அதிமுக ஐடி சாடியுள்ளது. அதேபோல் ஃபினிஷ்டு சிக்னல் காட்டிய ஸ்டாலின் மற்றும் விஜய்யின் செயல்பாடுகள் புரியவில்லையே என்றும் கிண்டல் செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே அதிமுக ஐடி விங் நக்கல், நய்யாண்டியில் அடித்து ஆடுகிறது. அதேபோல் சட்டசபையிலும் தவெக vs திமுக என்ற நிலையை உருவாக்க விடாமல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகிறார். இதனால் அதிமுக இப்போதும் தமிழக அரசியலின் முக்கிய அங்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.