சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைவதை பார்க்கும்போது, கடன் வாங்கிய ஒருவரையே கடனை வசூல் செய்யும் பொறுப்பில் அமர்த்துவது போன்ற காமெடியாக இருக்கிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 88 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக விஜயபாஸ்கர் மீது சிபிஐ வழக்கு, சோதனைகள் நடந்து ஆதாரங்கள் வெளிவந்தன. அப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை வைத்தே ஊழலை ஒழிப்பதாக சொல்வது முரண்பாடானது என்று அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான அய்யநாதன் கருத்து கூறியிருக்கிறார்.
tamil niram என்ற சேனலுக்கு அய்யநாதன் தந்த பேட்டியில், "தவெக தொடர்ந்து அதிமுகவிலிருந்து ஆட்களை தன்னுடைய கட்சியில் சேர்ப்பது தவறான அரசியல் உத்தியாகும்.. ஏனென்றால் அதிமுக பலவீனப்பட்டால், திமுகவிற்கு அடுத்தபடியாக 2வது இடத்தை தவெக எளிதாகப் பிடித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள்.
ஆனால், அதிமுகவினரையே ஒட்டுமொத்தமாகக் கட்சிக்குள் கொண்டுவந்தால், தவெகவின் ஆரம்பகால உண்மையான தொண்டர்கள் பின்னுக்கு தள்ளப்படுவார்கள். வரவிருக்கும் உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் இந்த மாற்றுக்கட்சியினரே எல்லா இடங்களையும் பிடித்துக் கொள்வார்கள். இதனால் மிக குறுகிய காலத்திலேயே தவெகவிற்குள் மிகப்பெரிய அளவில் உட்கட்சிப் பூசலும் அதிகாரப் போட்டியும் வெடிக்கும். முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைவதை பார்க்கும்போது, கடன் வாங்கிய ஒருவரையே கடனை வசூல் செய்யும் பொறுப்பில் அமர்த்துவது போன்ற காமெடியாக இருக்கிறது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 88 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக விஜயபாஸ்கர் மீது சிபிஐ வழக்கு, சோதனைகள் நடந்து ஆதாரங்கள் வெளிவந்தன. அப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களை வைத்தே ஊழலை ஒழிப்பதாக சொல்வது முரண்பாடானது. மத்தியில் பாஜகவும் மோடி-அமித்ஷா கூட்டணியும் எத்தகைய வாஷிங் மெஷின் அரசியலைச் செய்கிறார்களோ, அதையேதான் தற்பொழுது தவெக தலைவர் விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவும் தமிழகத்தில் செய்கிறார்கள். ஊழல்வாதிகளை வெளியே நிறுத்தாமல், தங்களுக்குள் இழுத்துக் கொண்டு, "எங்களிடம் வந்துவிட்டால் நீங்கள் தூய்மையானவர்" என்ற பாணியை விஜய் கையாளுகிறார். ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் நிதி பற்றிக் கேள்வி எழுப்புவது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய மாமனாரான லாட்டரி அதிபர் மார்ட்டின், தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவிற்கு 590 கோடி ரூபாயும், பாஜகவிற்குப் பல நூறு கோடிகளும் கொடுத்துள்ளார். இத்தகைய பின்னணி கொண்டவர்கள் எப்படி தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பார்கள்? உண்மையில், கட்சியின் ஒட்டுமொத்த தேர்தல் செலவுகளையும் முதலீட்டையும் ஆதவ் அர்ஜுனா பார்த்துக் கொள்வார் என்ற அக்ரிமென்ட் அடிப்படையிலேயே விஜய் செயல்படுகிறார். அதனால்தான் சோஷியல் மீடியாவில் மக்கள் இவர்களை "முதலமைச்சர் பேசுகிறார், முதலீடு செய்தவர் பேசுகிறார்" என்று விமர்சிக்கிறார்கள். வசதியான, சொகுசான வாழ்க்கைக்கு பழகிய விஜய்யால் இத்தகைய பண பல விஷயங்களில் சமரசம் செய்யாமல் அரசியல் நடத்த முடியாது. நான் தவெக ஆதரவிலிருந்து வெளியேறியதற்கும், ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட நிர்மல் குமார், லாட்டரி தரப்பான ஆதவ் அர்ஜுனா ஆகிய 2 பேரும்தான் முதன்மைக் காரணம். ஊழல் ஒழிப்பைப் பேசும் விஜய், 2017ம் ஆண்டிற்குப் பிறகுதான் ஊழல் அதிகரித்துவிட்டதாகக் கூறுகிறார். ஆனால், வேலுமணி, விஜயபாஸ்கர் மீது மிகப்பெரிய ஊழல் புகார்கள் எழுந்ததே அந்த காலகட்டத்தில்தான். பாஜகவில் ஊழல் வழக்குகளில் சிக்கிய சுவேந்து அதிகாரி, ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் எப்படிப் பதவிகளைப் பெற்றார்களோ, அதே அதிகார ஆசைக்காகவே இவர்களும் விஜய்யிடம் வருகிறார்கள். விஜயபாஸ்கரிடம் இப்போது இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ளனர், அவரிடம் சுயமரியாதையை எதிர்பார்க்க முடியாது. தவெகவில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால், வெளியிலிருந்து ஆட்களைப் பிடித்து இடைத்தேர்தல் நடத்த விஜய் திட்டமிட்டார், ஆனால் அந்த குதிரை பேரம் தற்பொழுது அம்பலமாகிவிட்டது. அரசியலில் சுய தூய்மை இருந்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். முன்னாள் பிரதமர் வி.பி. சிங் காங்கிரஸிலிருந்து வெளியேறி அலகாபாத் தேர்தலில் போட்டியிட்டபோது வெறும் 50,000 ரூபாய் மட்டுமே செலவு செய்து, எளிய முறையில் பிரச்சாரம் செய்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நான் நாம் தமிழர் கட்சியில் இருந்தபோதும், பணக்காரர்களிடம் பெரிய அளவில் நிதி பெறக்கூடாது என்ற விதியைக் கொண்டுவந்து, தொண்டர்களின் சிறிய பங்களிப்பு மூலமாகவே மாநாடுகளை நடத்திக் காட்டினேன். ஆரம்பத்தில் இதற்குத் துணையாக இருந்த சீமான், பின்னாள்களில் அவரே பண பல அரசியல் நோக்கிய ஒரு பெரிய கல்லாவாக மாறிவிட்டார். தவெகவினர் ஓமலூர் போன்ற தொகுதிகளில் தேர்தல் சமயத்தில் 3,000 ரூபாய் வரை பண விநியோகம் செய்துள்ளார்கள். எனவே, இவர்களெல்லாம் ஊழலை ஒழிக்க வரவில்லை. மேடையில் எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடிப் பேசுவதோடு இவர்களின் அரசியல் முடிந்துவிடுகிறது. பேரறிஞர் அண்ணா நேரடியாக மக்களைக் கையாண்டார், ஆனால் அவருக்குப் பின் வந்தவர்கள் கார்ப்பரேட்டுகளிடம் கடையை ஒப்படைத்துவிட்டார்கள், அதுவே தற்போதும் தொடர்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.விஜய்யின் பிரெயின் வாஷ்?
அமித்ஷா - மோடி கூட்டணி
ஆதவ் அர்ஜூனா
விஜய்பாஸ்கர் - குதிரை பேரம்
அரசியல் தூய்மை
ஊழலை ஒழிக்க வரவில்லை