சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு! தேர்தல் நேர பகடைக்காயா நாங்க?” கொந்தளித்த அஇபுதமமுக தலைவர்

  • சென்னை: வி.கே.சசிகலாவை அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தேர்தலுக்காக மட்டும் தங்களைக் பகடைக்காயாக சசிகலா பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    சசிகலாவை நீக்குவது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அஇபுதமமுக தலைவர் சக்கரவர்த்தி, "சசிகலாவை அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம். தேர்தல் நேரத்தில் மட்டும் பகடைக் காயாக எங்களை பயன்படுத்திக் கொண்டார். அவரால் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை.

    சசிகலா தொண்டர்களையும் சந்திக்கவில்லை. வேட்பாளரையும் சந்திக்கவில்லை. எத்தனையோ முறை அவரை தொண்டர்களைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். ஆனால் அவர் சந்திக்கவில்லை. கட்சி தொடர்பாக எந்த சந்திப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

    "தொண்டர்களின் எண்ணங்கள் ஈடேறிட அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அஇஅதிமுக ஒன்றுபட்ட, வலிமைமிக்க, பேரியக்கமாக மீண்டும் மலர வேண்டும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். தமிழக மக்களுக்கு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியாக அது அமையட்டும்" என சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார் சசிகலா.

    Advertisement

    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், அவருக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார்.

    2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக சசிகலா தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர், சக்கரவர்த்தி என்பவர் நடத்தி வந்த அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் சசிகலா. இந்தக் கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    அதிமுக கூட்டணிக்கு 3 தொகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது சசிகலாவின் கட்சி. குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்விக்கு சசிகலாவின் கட்சி காரணமாக அமைந்தது.

    சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளரை விட 5,989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதே தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளர் இசக்கிராஜா 11,602 வாக்குகள் பெற்றது நயினாரின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

    இதேபோல் அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் சசிகலாவின் கட்சி பாதிப்பை ஏற்படுத்தியது. முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் (68,003) வெற்றி பெற்றார். அங்கே அதிமுக வேட்பாளர் எஸ். பாண்டி பெற்ற வாக்குகள் 47,501. சசிகலா கட்சியின் வேட்பாளர் மருத்துவர் ராம்குமார் பாண்டியன் 40,422 வாக்குகள் பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அதேபோல் உசிலம்பட்டி தொகுதியில் 1,805 வாக்குகள் வித்தியாசத்தில் தவெகவிடம் வெற்றியை பறிகொடுத்தது அதிமுக. இங்கே சசிகலாவின் வேட்பாளர் அய்யப்பன் 16,620 வாக்குகள் பிரித்தும் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Chakravarthy, founder of the All india Puratchi Thalaivar Makkal Munnetra Kazhagam (AIPTMMK), has announced the decision to expel VK Sasikala from the party. He has also accused Sasikala of using them as pawns solely for the purpose of the elections.