இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்!

  • சென்னை: நடிகர் அஜித் குமாரின் தாயார் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அஜித்குமார் தாயாரின் இறுதிச்சடங்கில் அஜித்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    Advertisement

    திரையுலகிலும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார்.

    Advertisement

    கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அஜித்தின் தந்தை பி.சுப்ரமணியம் காலமானதைத் தொடர்ந்து, அவரது தாயார் மோகினி மணி வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவர் சனிக்கிழமை காலை உயிரிழந்தார்.

    அஜித்குமார் தனது பைக் சுற்றுலா தொடர்பாக துபாயில் இருந்த நிலையில், தாயாரின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்குமாரின் இல்லத்தில் அவரது தாயாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    Advertisement

    இந்தத் தகவல் அறிந்ததும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு சோகத்தில் இருந்த அஜித்குமாரை, முதல்வர் விஜய் ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். அஜித்தின் குடும்பத் துயரத்தின் போது நேரில் வந்து முதல்வர் ஜோசப் விஜய் ஆறுதல் கூறியது அனைவரையும் நெகிழச் செய்தது.

    முதலமைச்சர் விஜய்யைத் தொடர்ந்து நடிகை திரிஷா, நடிகர்கள் சரத்குமார், நாசர், இயக்குநர்கள் ஷங்கர், ஏ.எல். விஜய், சிவா உள்ளிட்ட பல முன்னணித் திரைப்பிரபலங்கள் அஜித்தின் இல்லத்திற்கு வந்து மோகினி மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    Advertisement

    தாயாரின் மறைவு குறித்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், "எங்கள் தாயார் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ளார். அவரது இறுதிக்காலத்தில் அவருக்குச் சிறந்த சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினருக்கு நன்றி. எங்கள் துயரப் பகிர்வில் பங்கெடுத்து இரங்கல் தெரிவிக்கும் அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும், இந்த இறுதி நிகழ்வு முற்றிலும் தங்களின் தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர். இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவும் உறுதிப்படுத்தி இருந்தார்.

    Advertisement

    அதன்படி, அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் முறைப்படியான சடங்குகள் முடிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அஜித்குமாரின் தாயார் மோகினியின் உடல், இறுதிச் சடங்குகள் செய்வதற்காக சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு தற்போது வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

    அமரர் ஊர்தியை பின்தொடர்ந்து அஜித் மற்றும் அவரது உறவினர்கள் காரில் சென்றனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டனர். 200க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அஜித் குமரின் ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு மோகினி மணியின் உடல் கொண்டுவரப்பட்டது. வண்டியில் கொண்டுவரப்பட்ட தாயின் உடலை கடைசி ஒருமுறையாக தனது தோளில் தூக்கி மயானத்திற்குள் கொண்டு சென்றார் அஜித். அதன்பின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடந்தன. அஜித்தின் சகோதரர் அனில் குமார் இறுதிச்சடங்கை மேற்கொண்டார். இதையடுத்து மோகினி மணி உடல் தகனம் செய்யப்பட்டது.

    English Summary

    The funeral procession for actor Ajith Kumar's mother Mohini mani has begun. Only members of Ajith Kumar's family are participating in the funeral rites. More than 200 police personnel have been deployed at the Besant Nagar electric crematorium.