காவிரியில் ஊடுருவிய ஏலியன் மீன்.. சத்தமின்றி ஆக்கிரமிக்கும் அமேசான் அரக்கன்! மொத்த ஆறுக்கும் சிக்கல்

  • சென்னை: தமிழ்நாட்டின் நீர் தேவையில் பெரும்பாலானவற்றை பூர்த்தி செய்யும் காவிரி நதியில் ஏலியன் மீன் ஒன்று ஊடுருவி உள்ளதாம். இதனால் அந்த நதிக்கே பெரிய ஆபத்து ஏற்படலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    Advertisement

    நாமக்கல், கரூர் அல்லது திருச்சி ஆகிய பகுதிகளில் நீங்கள் காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றால், உங்கள் தூண்டிலில் சற்றே விசித்திரமான ஒரு உயிரினம் சிக்கக்கூடும். அது பார்ப்பதற்கு சாதாரண மீனைப் போல இல்லாமல், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் சிறு வடிவம் போல காட்சியளிக்கிறது.

    Advertisement

    பார்க்க குட்டி டைனோசர் போல இருக்கும் ,இந்த மீன் ஒரு ஏலியன் மீன் என்கிறார்கள் இயற்கை ஆய்வாளர்கள். தற்போது காவிரி ஆற்றுப் பகுதிகளில் உள்ளூர் மீனவர்களின் வலைகளில் இந்த சக்கர் மவுத் செய்ல்பின் கேட்ஃபிஷ் (Sucker Mouth Sailfin Catfish) எனப்படும் மீன்கள் தொடர்ந்து அதிகளவில் சிக்கி வருகின்றன. இது மீனவர்களை இடையே விவாதத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    அமேசானில் இருந்து காவிரிக்கு வந்தது எப்படி?

    இந்த விசித்திரமான மீன் இந்தியாவின் பூர்வீக இனம் அல்ல. இது தென் அமெரிக்காவின் புகழ்பெற்ற அமேசான் நதிப் படுகையைச் சேர்ந்தது. தொட்டிகளில் வளர்க்கப்படும் அலங்கார மீன் விற்பனை மூலமாகவே இது தமிழகத்தின் நதி அமைப்புகளுக்குள் நுழைந்துள்ளது. வீடுகளில் உள்ள சிறிய கண்ணாடித் தொட்டிகளைச் சுத்தமாக வைத்திருக்க, பாசிகளை உண்ணும் கிளீனர் ஃபிஷ் என்ற பெயரில் மக்கள் இவற்றைச் சிறிய அளவில் வாங்கினர்.

    Advertisement

    முதலில் கிளீனர் ஃபிஷ் என்று வாங்கிய பலருக்கும் இது ஒரு கில்லர் ஃபிஷ் என்று தெரியாது. நாளாக நாளாக இந்த மீன்கள் தொட்டியை விடப் பெரிய அளவில் வளர்ந்தவுடன், என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் அருகில் உள்ள உள்ளூர் நீர்நிலைகளிலும் ஆறுகளிலும் இவற்றைத் திறந்து விட்டனர். அதுவே இன்று காவிரியின் பெரும் சாபமாக மாறியுள்ளது.

    உயிருள்ள இரும்பு கவசம்

    நமது ஊர் ஆறுகளில் வாழும் சாதாரண கெண்டை அல்லது கெளுத்தி மீன்களுக்கு மென்மையான செதில்கள் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த அமேசான் கேட்ஃபிஷ் உடலானது கத்தி போன்ற கூர்மையான, எலும்பாலான கவசம் போன்ற எலும்புகளால் மூடப்பட்டுள்ளது. இதன் உடல் அமைப்பு மிகவும் கடினமாக இருப்பதால், காவிரியில் வாழும் பெரிய மீன்களோ அல்லது நீர்நிலைப் பறவைகளோ இதைக் கடித்து உண்ண முடிவதில்லை. இப்படி தண்ணீரில் தன்னை தின்னும் அளவிற்கு எதிரிகள் இல்லாததால், இதன் இனப்பெருக்கம் காவிரியில் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    பூர்வீக மீன்களின் உணவைப் பறிக்கும் பசிக்காரன்

    இந்த மீனின் தலைப் பகுதியின் அடிப்பகுதியில் ஒரு விசித்திரமான, வட்ட வடிவ உறிஞ்சும் வாய் உள்ளது. இதைப் பயன்படுத்தி இந்த மீன்கள் ஆற்றின் அடிப்பகுதி, பாறைகள் மற்றும் படகுகளின் அடிப்பகுதிகளில் தங்களை பலமாக ஒட்டிக்கொள்கின்றன. அங்கு படிந்துள்ள பாசிகள் மற்றும் கரிமப் பொருட்களை ஒரு வேக்யூம் கிளீனர் போல முழுமையாகச் சுரண்டித் தின்றுவிடுகின்றன.

    இதனால், தமிழகத்தின் பாரம்பரிய நதி மீன்களான கெண்டை, கெளுத்தி போன்ற பூர்வீக மீன்களுக்குக் காவிரியில் உணவே இல்லாமல் போகிறது. இது ஒட்டுமொத்த ஆற்றுச் சூழியலையும் தலைகீழாக மாற்றுகிறது.

    Advertisement

    எதையும் தாங்கும் விசித்திரத் திறன்

    ஆறுகளில் வறட்சி ஏற்பட்டு நீரின் தரம் குறைந்தாலோ அல்லது ஆக்ஸிஜன் அளவு முற்றிலுமாகக் குறைந்தாலோ கூட இந்த மீன்கள் இறப்பதில்லை. நீர் வற்றிய ஓடைகளில், இவை நீரின் மேற்பரப்பிற்கு வந்து காற்றைச் சுவாசித்து, தங்கள் வயிற்றின் உள்பகுதி மூலமாக ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து உயிர்வாழும் அசாத்தியத் திறன் கொண்டவை.

    இந்த மீன்களால் உள்ளூர் மீனவர்கள் மிகக் கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதன் கூர்மையான முட்களும் செதில்களும், மீனவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கும் விலையுயர்ந்த நைலான் மீன்பிடி வலைகளைக் கிழித்து முற்றிலும் நாசமாக்குகின்றன.

    Advertisement

    மேலும், இதன் கடினமான ஓடு மற்றும் சுவையற்ற தன்மையால் சந்தையில் இதை யாரும் உணவிற்காக வாங்குவதில்லை. வலைகளைச் சேதப்படுத்துவதுடன், விற்கவும் முடியாத இந்த "ஏலியன் மீன்கள்" காவிரியை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    English Summary

    Alien Fish in Cauvery changes the eco system: Why This Amazonian fish is Destroying Tamil Nadu