திமுகவில் இணைந்தார் அலிம் அல்புகாரி.. காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டால் அதிரடி முடிவு!

  • சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி அலிம் அல் புகாரி. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி தவெக கூட்டணியில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார் அலிம் அல்புகாரி.

    Advertisement

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது தவெக.

    Advertisement

    தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்தனர். சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர்.

    இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது" எனக் கூறியிருந்தார். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    Advertisement

    இதையடுத்து அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அலிம் அல்புஹாரி அறிவித்தார். அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் அல்ல; அது கொள்கைப் பிடிப்பாக இருக்க வேண்டும் என்பதையே ராகுல் காந்தி அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். ஆகையால் மிகுந்த மனவேதனையுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி தி.மு.கவில் இணைந்தார்.

    Advertisement

    அதுபோது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    English Summary

    Alim Al Buhari, a former State functionary of the Congress party, joined the DMK today in the presence of DMK President MK Stalin. Alim Al Buhari had resigned from the Congress party in protest against its decision to withdraw from the DMK alliance and join the TVK alliance.