சென்னை: பாஜக பிரமுகரும், நடிகையுமான அலிசா அப்துல்லா அளித்த புகாரின் பேரில் யூடியூபர் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர். அலிசா அப்துல்லாவின் பச்சிளம் இரட்டைக் குழந்தைகளை மையப்படுத்தி தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் யூடியூபர் முக்தாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரபல கார் மற்றும் பைக் பந்தய வீராங்கனையாகவும், திரைப்பட நடிகையாகவும் அறியப்படும் அலிசா அப்துல்லா, கடந்த 2022-ம் ஆண்டு அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் அவருக்கு பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக பிரசவம் மற்றும் குடும்ப காரணங்களால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த அவர், சமீபத்தில் தனது குழந்தைகள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான சில வீடியோக்கள் காரணமாக கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தனது குடும்பம், கணவர் மற்றும் புதிதாக பிறந்த இரட்டைக் குழந்தைகள் குறித்து மிகவும் இழிவாகவும் அவதூறாகவும் பேசியதாக அலிசா அப்துல்லா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்கள் மூலம் தொடர்ந்து தன்மீதும், தனது குடும்பத்தினர்மீதும் அவதூறு பரப்பப்படுவதாகவும், குறிப்பாக பச்சிளம் குழந்தைகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். பெண்களை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அலிசா அப்துல்லா கண்கலங்கியபடி தனது வேதனையை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர், "எனக்கு அண்ணாமலை ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல, குடும்ப நண்பர் போன்றவர். அவரை மிகவும் மதிக்கிறேன். ஆனால் என்னையும் என் குழந்தைகளையும் தொடர்புபடுத்தி மிகவும் மோசமாக பேசப்பட்டிருக்கிறது. ஒரு குழந்தையை மையப்படுத்தி யாரும் அரசியல் செய்யக்கூடாது. முக்தாரின் குழந்தைகள் குறித்து யாராவது இப்படிப் பேசினால் அவர் எப்படி உணர்வார் என்பதை சிந்திக்க வேண்டும்" என்றார். மேலும், தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தவறான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "என் பெற்றோர் மற்றும் கணவர் எனக்கு உறுதுணையாக இருப்பதால் நான் மன உறுதியுடன் இருக்கிறேன். ஆனால் வேறு ஒரு குடும்பமாக இருந்திருந்தால் இந்த பிரச்சினை குடும்ப சிக்கலாக மாறியிருக்கும். குழந்தைகள் குறித்து பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் தெரிவித்தார். இதோடு நிற்காமல், சம்பந்தப்பட்ட வீடியோக்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், அவதூறு வழக்குகள் உள்ளிட்ட அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் அலிசா அப்துல்லா எச்சரிக்கை விடுத்தார். "முக்தார் மற்றும் திருச்சி சூர்யா இருவரையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து இழிவாக பேசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது" என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், திருச்சி சூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் முக்தாரை பிடிக்கவும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.அலிசா அப்துல்லா
அண்ணாமலை
திருச்சி சூர்யா
முக்தார்
திருச்சி சூர்யா கைது