தவெக கூட்டணியில் வெடித்த விரிசல்! அரசு வழக்கறிஞர் நியமனத்தில் காங்கிரஸுக்கு கோபம்!

  • சென்னை: தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அரசு வழக்கறிஞர் நியமனங்களில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பெரும் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே கூட்டணிக் கட்சிகளிடையே இத்தகைய விரிசல்கள் வெளிவரத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கூட்டணி ஆட்சி

    தமிழ்நாட்டில் தவெக கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து 2 மாதங்கள் ஆகின்றன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளை நேரடியாக நிர்வாக அதிகாரத்தில் பங்கேற்கச் செய்து கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தவெக அரசை வெளியில் இருந்து ஆதரித்து வருகின்றன.

    வழக்கறிஞர் நியமனங்களில் எழுந்த முதல் சோதனை

    இந்த கூட்டணியின் ஹனிமூன் பீரியட் தற்போது முடிவிற்கு வர தொடங்கி உள்ளது. அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்தில் தற்போது தனது முதல் பெரிய சோதனையை இந்த கூட்டணி எதிர்கொண்டுள்ளது.

    Advertisement

    மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் அரசு வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையின் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு காங்கிரஸ் மற்றும் விசிகவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் முறைப்படி விண்ணப்பித்திருந்தனர்.

    கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஆட்சி நடப்பதால், இந்த வழக்கறிஞர் பதவிகளில் தகுந்த விகிதாச்சாரப் பங்கீடு தங்களது கட்சி வழக்கறிஞர்களுக்கும் கிடைக்கும் என்று கூட்டணிக் கட்சிகள் பெரிதும் எதிர்பார்த்தன.

    ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட அரசு வழக்கறிஞர் நியமனப் பட்டியலில், அனைத்து நீதித்துறை நிலைகளிலும் உள்ள பதவிகள் முழுமையாக ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஆட்சியில் அதிகாரப் பகிர்வு இருக்கும்போது, சட்டப் பிரதிநிதித்துவத்திலும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சியின் தொண்டர்களும் வழக்கறிஞர்களும் பகிரங்கமாகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

    Advertisement

    கொந்தளிக்கும் கூட்டணிக் தலைவர்கள்

    இந்த நியமனங்களுக்கு எதிராகக் கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்களும், அவர்களின் சட்டப் பிரிவுகளும் உடனடியாகத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.

    நாங்கள் இந்த அரசின் ஒருங்கிணைந்த அங்கமாக இருப்பதால், அரசு வழக்கறிஞர்கள் தேர்வில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும் என்று இயல்பாகவே எதிர்பார்த்தோம். காங்கிரஸ் சட்ட வல்லுநர்களுக்கு குறைந்தது 25 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கப்படும் என்று நாங்கள் மிகவும் ஆவலுடன் நம்பினோம். எங்களது மாநிலத் தலைமை மூலமாகவே முறைப்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தபோதிலும், ஒரு பதவி கூட எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று விமர்சனங்களை வைக்கின்றனர்.

    Advertisement

    இதேபோன்ற அதிருப்தி அலை விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் சட்டப் பிரிவுகளிலும் எதிரொலித்து வருகிறது.

    பொதுவாக, ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தங்களது ஆதரவு வழக்கறிஞர்களுக்குப் பரிசளிக்கும் வகையிலேயே அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஒரு கூட்டணி ஆட்சியில் இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளும் கலந்தாலோசனைகளும் அவசியம் என்று அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    அனைத்து அரசு வழக்கறிஞர் பதவிகளையும் தவெக மட்டுமே வைத்துக்கொள்வது, தேவையில்லாத உரசல்களையும் மனக்கசப்புகளையும் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    English Summary

    Allies Upset Over TVK's Exclusive Lawyer Appointments