’அந்த’ சேர் தான் வேண்டும்.. அடம் பிடிக்கும் ஆளூர் ஷாநவாஸ்! அரண்டு போன அறிவாலயம்! என்ன நடந்தது?

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் கட்சி தாவல், கூட்டணி தாவல் போன்ற நடவடிக்கைகள் வேகமெடுத்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தொடர்பான தகவல்கள் விசிக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் திமுகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக கட்சியில் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு கேட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் திமுகவினரை கோபமடைய வைத்துள்ளதாம்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தங்களது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    குறிப்பாக ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளில் உள்ள பல நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், விசிகவின் முக்கிய முகமாக அறியப்படும் ஆளூர் ஷாநவாஸ் பெயர் தான் அதிகமாக அடிபடுகிறது.

    ஆளூர் ஷாநவாஸ்

    நீண்ட காலமாக கட்சிக்காக களத்தில் செயல்பட்டு வந்த அவர், தொலைக்காட்சி விவாதங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். கட்சியின் வளர்ச்சியிலும், கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது, அவருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதிருப்தி

    அப்போது ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்கும் நோக்கில் கட்சி தலைமையால் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் நடந்த சில மாற்றங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் அவரை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்ற தகவல்களும் வெளியாகின.
    இதற்கிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான பனையூர் பாபு சமீபத்தில் திமுகவில் இணைந்தார்.

    திமுக

    அந்த நிகழ்வுக்குப் பிறகு, மேலும் சில முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவல் குறித்து யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அந்த பட்டியலில் ஆளூர் ஷாநவாஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. திமுக வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் படி, திமுகவுடன் ஆளூர் ஷாநவாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுகவின் மாநில நிர்வாக அமைப்பில் இஸ்லாமிய சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் தனக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    துணை பொதுச்செயலாளர்

    திமுகவைப் பொறுத்தவரை, தேர்தலுக்குப் பிறகு பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல்வேறு நிலைகளில் உள்ள நிர்வாகிகள் திமுக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், திமுக தலைமையின் முன் புதிய சவால் உருவாகியுள்ளது.

    மாவட்டச் செயலாளர்

    கட்சியில் இணைய விரும்பும் பல முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை கோருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாநில அளவிலான பொறுப்புகள், மாவட்டச் செயலாளர் பதவிகள் மற்றும் அமைப்புச் சார்ந்த முக்கிய பொறுப்புகள் தொடர்பாக கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    கட்சிக்குள் அதிருப்தி

    இதுபோன்ற சூழலில், புதியவர்களுக்கு பொறுப்பு வழங்குவது மற்றும் ஏற்கனவே கட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகளின் அதிருப்தியை சமாளிப்பது திமுக தலைமைக்கு சவாலாக மாறியுள்ளது.
    கட்சிக்குள் அதிருப்தி உருவாகாமல் பார்த்துக்கொள்வதோடு, புதியவர்களையும் ஈர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கட்சியில் சேர்ந்த ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் பதவி கேட்டுக் நெருக்கடி அளித்து வருகிறார்களாம்.

    English Summary

    Reports suggest Aloor Shanavas seeks DMK deputy general secretary post amid political realignments after Tamil Nadu Assembly elections.