விஜய்யை கொண்டாடும் வன்னியரசு.. கொதிக்கும் ஷாநவாஸ்.. திக்கு தெரியாமல் திருமா.. காலியாகும் விசிக

  • சென்னை: தமிழக அரசியல் களத்தில் தவெக கூட்டணி ஆட்சி எனும் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டு சில மாதங்களே முடிந்துள்ள நிலையில், விசிக உள்ளே உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசில் அமைச்சரவைப் பங்கைப் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்கட்சிப் புயல் வீசத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    ஒருபுறம் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னியரசு, தவெக அரசின் ஒவ்வொரு மூவிற்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு, விசிகவின் பிரதிநிதியை விடவும் தவெகவின் தீவிர ஆதரவாளரைப் போலச் செயல்படுகிறார் என்ற கொந்தளிப்பு விசிக உள்ளேயே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    Advertisement

    மறுபுறம், ஆளூர் ஷாநவாஸ், தவெக அரசின் கொள்கை ரீதியிலான பலவீனங்களை பொதுவெளியில் போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு துருவங்களுக்கும் இடையே கட்சியின் தலைவரான தொல். திருமாவளவன் காத்து வரும் மௌனம், கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கடும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வன்னியரசுவின் மாற்றம்- விசிகவா? தவெகவா?

    அமைச்சராகப் பதவியேற்ற நாளில் இருந்தே வன்னியரசுவின் அணுகுமுறை விசிக தொண்டர்களுக்கே வியப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சியில் பங்கெடுத்ததன் நோக்கம் ஜாதி மறுப்பு, சமூக நீதி கொள்கைகளை தவெக அரசை நோக்கி நகர்த்துவதுதான் எனக் கூறப்பட்ட நிலையில், களத்தில் நடப்பதோ வேறு.

    Advertisement

    அரசின் எந்தவொரு முடிவாக இருந்தாலும், அதற்கு முதல் ஆளாக ஆதரவுக் கொடி பிடிப்பது வன்னியரசுதான். தவெகவின் முக்கியத் தலைவர்கள் அமைதியாக இருக்கும்போது கூட, அரசின் செயல்பாடுகளை நியாயப்படுத்திப் பேசுவதில் வன்னியரசு முந்திக் கொள்கிறார். கட்சியின் சித்தாந்தத்தையும் அடையாளத்தையும் மறந்துவிட்டு, முழுமையாக தவெக நிர்வாகியாகவே வன்னியரசு மாறிவிட்டார்.. என விசிகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

    அதிகாரத்தின் சுகம் கட்சியின் தலித்திய மற்றும் முற்போக்கு அரசியலை நீர்த்துப்போகச் செய்துவிட்டதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

    பொங்கி எழுந்த ஆளூர் ஷாநவாஸ்..

    வன்னியரசுவின் இந்த அமைச்சரவை விசுவாசத்திற்கு நேர்மாறாக நின்று கொண்டிருக்கிறார் ஆளூர் ஷாநவாஸ். தவெக அரசை அமைக்கும் முடிவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆளூர் ஷாநவாஸ் முழுமையான ஆதரவை வழங்கவில்லை என்ற பேச்சு நிலவி வந்த நிலையில், தற்போது அது பகிரங்க வெடிப்பாக மாறியுள்ளது.

    Advertisement

    அண்மைய நாட்களில் தவெக அரசின் பல முடிவுகளை ஆளூர் ஷாநவாஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதிகாரத்தில் பங்கு என்பது கொள்கையை அடகு வைப்பதற்காக அல்ல என்ற ரீதியில் அவர் எழுப்பும் கேள்விகள், தவெக தலைமையை மட்டுமன்றி, விசிக அமைச்சரவை தரப்பையும் நேரடியாகப் பதம் பார்க்கிறது.

    சிறுபான்மையினர் நலன், வேலைவாய்ப்பு கொள்கை மற்றும் சமூக நீதி சார்ந்த விவகாரங்களில் தவெக அரசின் மௌனத்தையும் மெத்தனத்தையும் ஆளூர் ஷாநவாஸ் தொடர்ச்சியாகத் தோலுரித்து வருகிறார். நாம் அரசைக் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க வேண்டும்; அவர்களின் நிழலாக மாறக் கூடாது.. என்ற அவரது குரல், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பலத்த ஆதரவைப் பெற்று வருகிறது.

    Advertisement

    திருமாவளவனின் மெளனம்!

    இந்த இருவேறு முரண்பட்டப் பாதைகளுக்கு நடுவே சக்கர வியூகத்தில் சிக்கியதை போல நிற்கிறார் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

    பொதுவாக எந்தவொரு அரசியல் சூழலிலும் மிகத் தெளிவான, அழுத்தமான கருத்துக்களை முன்வைக்கும் திருமாவளவன்.. கடந்த சில மாதங்களாகவே மாறி மாறி பேசி வருகிறார். மாறி மாறி நிலைப்பாடுகளை எடுத்து வருகிறார்.

    இப்போது நிலவும் உள்கட்சிப் பூசல் குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார். வன்னியரசுவை அழைத்து எச்சரிக்கவோ, அல்லது ஆளூர் ஷாநவாஸின் விமர்சனங்களைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் அவர் திணறுவது தெளிவாகத் தெரிகிறது.

    Advertisement

    தவெக கூட்டணியை முறித்துக் கொண்டால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் செல்வாக்கு பறிபோகும்; அதே நேரத்தில் தவெக வை முழுமையாக ஆதரித்தால் கட்சியின் தனித்துவமான கொள்கை அடையாளம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்ற இருமுனை கத்தியின் மீது திருமாவளவன் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

    English Summary

    Aloor Shanavas Slams Vijay Govt while Vanniyarasu Turns Loyalist, Thiruma Silent