அம்பை தொகுதி.. 50 ஆயிரம் நாதக நிர்வாகிகளை தேர்தல் பணிக்கு கொண்டு வரும் சீமான்.. பின்னணி என்ன?

  • சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் களமிறங்கும் சூழலில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரம் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற தயார் செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. அம்பை தொகுதியில் வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற வகையில் கைப்பற்றினாலே, எளிதாக வெல்ல முடியும் என்று சீமான் கணக்கு போட்டிருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறங்க உள்ளார். சட்டசபைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் டெபாசிட் கூட பெறவில்லை. தற்போது தங்களுக்கு சாதகமில்லாத தொகுதியில் சீமான் களமிறங்குவது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

    Advertisement

    நாதக கட்சிக்கு அவசரமாக ஒரு தேர்தல் வெற்றி அவசியமாக உள்ளது. தவெக கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் விஜய் ஆட்சியை பிடித்துவிட்ட சூழலில், சீமான் 16 ஆண்டுகளில் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை. இதனால் கட்டமைப்பு ரீதியாக நாதக மிகப்பெரிய அளவில் சிக்கலை சந்தித்து வருகிறது. நாதகவின் சரி பாதி வாக்குகளை விஜய் கைப்பற்றி எடுத்து சென்றுவிட்டார்.

    மீதமுள்ள ஆதரவாளர்களை தக்க வைத்து கொள்ள சீமான் சட்டசபை செல்ல வேண்டும் என்று கருதுகின்றனர். இதன் காரணமாகவே அம்பை தொகுதியில் சீமான் ரிஸ்க் எடுத்துள்ளதாக நாதகவினர் கூறுகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சீமானுக்காக தேர்தல் பணியாற்ற சுமார் 50 ஆயிரம் நிர்வாகிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

    Advertisement

    அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்டவற்றுக்கு சீமான் பொறுப்பேற்க இருக்கிறார். நெல்லையில் இதற்காக இடம் தேடும் படலம் தொடங்கியுள்ளது. இதனிடையே திமுக, அதிமுக தன்னை பொது வேட்பாளராக ஏற்கும் என்று சீமான் நம்புகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நாதகவால் தொடங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

    ஆனால் சீமானை கூட்டணிக்குள் கொண்டு வரவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விரும்புவதாக தெரிகிறது. அம்பையில் சீமானுக்கு ஆதரவு கொடுத்தால், மற்ற 4 தொகுதி இடைத்தேர்தலில் நாதக ஆதரவை இரு கட்சிகளும் எதிர்பார்க்கும். அதுமட்டுமல்லாமல் தாராபுரம் தொகுதியில் தவெக 9,900 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றது. இதில் சீமான், திமுகவை ஆதரித்திருந்தால் வெற்றியில் மிகப்பெரிய மாற்றம் வந்திருக்கும். இதனால் சீமானின் முடிவை பொறுத்தே, இரு கட்சிகளும் அவரை ஆதரிப்பதா, வேண்டாமா என்று முடிவு எடுக்கும் என தெரிகிறது.

    English Summary

    Ambai Bypoll: NTK to Deploy 50,000 Cadres Across Tamil Nadu for Seeman Campaign