சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது

  • சென்னை: சென்னை அம்பத்தூரில் காணாமல் போன இரண்டு சிறுமிகளை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், ஆவடி மாநகர போலீசாரால் மனோஜ், ராஜா ஆகிய இரு இளைஞர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Advertisement

    அம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் இரண்டு சிறுமிகள் திடீரென காணாமல் போனதாகக் கூறி, பதறிப்போன பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். விசாரணையின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த மனோஜ், ராஜா ஆகிய இரண்டு வாலிபர்களைப் பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்தனர்.

    Advertisement

    அப்போது வெளிவந்த வாக்குமூலம் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது. அந்த இரு நபர்களும் சேர்ந்து அச்சிறுமிகளைக் கடத்திச் சென்று, ஒரு ரகசிய அறையில் அடைத்து வைத்துத் தொடர்ந்து பாலியல் தொல்லை தந்து வந்தது அம்பலமானது. குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அந்த இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று தான் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. அதற்கு இன்னொரு வன்கொடுமை சம்பவமும் ஒரே மாவட்டத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    கும்மிடிப்பூண்டி அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று காலை (ஜூன் 15) உயிரிழந்துவிட்டதாக, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் கூறினார்.

    'இந்தச் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம்' எனத் தகவல் பரவிய நிலையில், ஒருவர் மட்டுமே குற்றச் செயலில் ஈடுபட்டதாக திருவள்ளுர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

    பாஜக ஆர்ப்பாட்டம்

    பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்கக் கோரியும் பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கவும் ஆளும் அரசினை வலியுறுத்தும் விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற 18.06.2026 வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னையில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினை மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் மாநில செயலாளர்
    வினோஜ் பி செல்வம் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்திட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    English Summary

    Avadi police arrested two youths, Manoj and Raja, for abducting two missing minor girls and detaining them in a room in Chennai's Ambattur. Further investigation is underway.