சென்னை: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை டெல்லி அழைத்திருக்கிறது. அதன் பேரில் இன்று டெல்லிக்குச் செல்கிறார் அர்லேக்கர். தமிழகத்திற்கு முழு நேர ஆளூநரை நியமிப்பது தொடர்பாக அவரிடம் விவாதிக்கவே டெல்லி அழைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரின் இந்த டெல்லி பயணத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத்சா ஆகியோரை சந்திக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை அண்மையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றியது மத்திய மோடி அரசு. இதனை அடுத்து கேரளாவின் முழு நேர ஆளுநராக இருந்து வரும் அர்லேக்கர், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
இரண்டு மாநிலங்களின் அரசு நிர்வாகத்தையும் இவர் கவனிக்க வேண்டியதாக இருந்தது. இந்த நிலையில், இரு மாநில அரசு நிர்வாகத்தையும் கவனிப்பது கடினமாக இருப்பதாக அண்மையில் அமித் ஷாவிடம் அர்லேக்கர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, பிரதமர் மோடியிடம் இது குறித்து விவாதித்துள்ளார் அமீத்சா. அப்போது, தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக நீண்ட காலத்துக்கு அவரை வைத்திருக்க முடியாது என்கிற ஆலோசனை நடந்துள்ளது. இந்த சூழலில்தான் டெல்லிக்கு அர்லேக்கர்கரை அழைத்துள்ளார் அமித் ஷா. அதன் பொறுட்டு டெல்லிக்கு செல்லும் அவரிடம், தமிழகம் அல்லது கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் உங்களுக்கு எங்கு இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று கேட்டு அதனடிப்படையில் முடிவு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அர்லேக்கரின் விருப்பத்தைப் பொறுத்து தமிழகத்திற்கு புது ஆளுநர் கிடைப்பாரா? அல்லது தமிழகத்தின் முழு நேர ஆளூநராக இவர் நியமிக்கப் படுவாரா? என்ற கேள்விகள் லோக்பவன் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. தமிழகத்தின் முழு நேர ஆளுநராக இருப்பதையே அர்லேக்கர் விரும்புவதாகவும் தமிழக லோக் பவன் அலுவலகர்கள் மத்தியில் பரவியிருக்கிறது.