தாமரை மலரவே மலராது.. லோக்கல் தலைகளால் கடுப்பில் ’டெல்லி’ மேலிடம்! கோதாவில் குதிக்கும் அமித் ஷா?


  • சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாத நிலையில், தமிழக பாஜகவை மீண்டும் கட்டமைத்து வலுப்படுத்தும் பணியில் அக்கட்சியின் தேசிய தலைமை நேரடியாக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது, பாஜக வட்டாரங்களில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் களம் இறங்கியது. தமிழகம் முழுவதும் பல்வேறு பிரசாரங்கள், கூட்டங்கள், சமூக வலைதள நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

    Advertisement

    ஆனால் தேர்தல் முடிவுகள் கட்சியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. இதனால் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அளவிலான நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    பாஜக தோல்வி

    பல மாவட்டங்களில் அமைப்பு ரீதியான பலவீனங்கள் இருந்ததாகவும், தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் கட்சி நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே மாநில பாஜக தலைமை அமைப்பில் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சு கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. குறிப்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் குறித்து கட்சியின் தேசிய தலைமையில் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    நயினார் நாகேந்திரன்

    அதேநேரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு எதிராக எந்தவித அதிருப்தியும் இல்லை என்றும், அவருக்கு மத்திய அரசில் அல்லது தேசிய கட்சி அமைப்பில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு முன்பு மாநில பாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதேபோன்ற வாய்ப்பு நயினார் நாகேந்திரனுக்கும் கிடைக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    அமித் ஷா

    இந்த சூழ்நிலையில்தான் அமித் ஷா நேரடியாக தமிழக பாஜக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மேற்கு வங்க வெற்றிக்குப் பிறகு, தென் மாநிலங்களில் பாஜகவை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய தலைமை செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மக்களவைத் தேர்தல்

    அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில், அதற்கான அடித்தளத்தை இப்போதே அமைக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக செயல்படுவதாக தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தில் வாக்கு வங்கியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதை தேர்தல் வெற்றியாக மாற்றும் வகையில் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அமித் ஷா சென்னை வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நேரடியாக ஆலோசனை

    அப்போது மாநில மையக்குழு கூட்டம், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிர்வாகிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்த உள்ளாராம். அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டமும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சென்னை, கோவை, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டங்களில் அவர் பங்கேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    பூத் கமிட்டி

    பாஜகவின் தேர்தல் வெற்றியில் பூத் கமிட்டிகளின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அடித்தள நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டு, புதிய திட்டங்களை வகுக்க அமித் ஷா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில பாஜக நிர்வாகிகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்களை நேரில் சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விளக்கி வருகின்றனர்.

    தமிழக அரசியல்

    அந்த முயற்சியின் அடுத்த கட்டமாக, தொழில்துறை, கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிக்க நபர்களை அமித் ஷாவே நேரடியாக சந்தித்து கருத்துக்களை கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களம் தற்போது மிக வேகமாக மாறி வரும் நிலையில், புதிய அரசியல் சக்திகள் உருவாகி வருகின்றன. மேலும், கூட்டணிகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

    Advertisement

    தமிழக பாஜக

    இந்த சூழலில் தமிழகத்தில் பாஜக தனது இடத்தை வலுப்படுத்த தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அமித் ஷாவின் தொடர் வருகைகள், கட்சியில் செய்யக் கூடிய மாற்றங்கள், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது ஆகியவை தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    BJP high command plans major organisational revamp in Tamil Nadu as Amit Shah prepares to take a direct role.