பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்!

  • சென்னை: தமிழக பாஜகவின் எதிர்காலம், தேர்தல் தோல்விக்குப் பிந்தைய கட்சி மறுசீரமைப்பு மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விலகல் ஆகியவை குறித்து டெல்லியில் நடைபெற்றதாக கூறப்படும் பாஜக மாநில மையக்குழுக் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அண்ணாமலை குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக கூறியுள்ளாராம். இதனால் அமித் ஷாதான் அண்ணாமலையை கட்சி ஆரம்பிக்க வைத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    Advertisement

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக, அண்ணாமலை கட்சியில் இருந்து விலகிய பிறகு நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால், அதன் மீது இயல்பாகவே அதிக கவனம் திரும்பியிருந்தது.

    Advertisement

    கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் அமித் ஷா, தேசிய தலைவர் நிதின் நபின், பி.எல். சந்தோஷ், அரவிந்த் மேனன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

    பாஜக ஆலோசனை

    கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியின் அடுத்தகட்ட திட்டங்கள், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டத்தின் முக்கிய பகுதியை அண்ணாமலை தொடர்பான விவாதங்களே ஆக்கிரமித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டத்தில் பேசிய அமித் ஷா, தேர்தல் முடிவுகளால் கட்சியினர் மனமுடைந்து போகக் கூடாது என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அமித் ஷா

    வாக்கு சதவீதம் குறைந்திருப்பது மட்டுமே கட்சியின் வளர்ச்சி நின்றுவிட்டது என்று அர்த்தமல்ல என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், திமுகவுக்கு மாற்றாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்திருப்பதே தற்போதைய நிலை என்றும், அந்தக் கட்சி இவ்வளவு வேகமாக வளர்ச்சி அடையும் என்று தாங்களும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகம்

    அதேநேரத்தில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு களத்தில் ஆதரவு அதிகரித்து வருவதை அண்ணாமலை முன்கூட்டியே எச்சரித்ததாகவும், அந்த எச்சரிக்கையை கட்சி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அமித் ஷா குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலைப் பற்றிய விவாதத்தை தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்றும், இனி கட்சியின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அண்ணாமலை

    இந்த சூழலில்தான் அண்ணாமலை தொடர்பாக அமித் ஷா முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்ததாக கூறப்படுகிறது. "அண்ணாமலை இந்த இயக்கத்தில் இருந்து வெளியேறியிருக்கலாம். ஆனால் ஒரு தனிநபரைவிட அமைப்பு பெரியது. இயக்கம் பெரியது. நாட்டின் நலன் பெரியது. கடந்த காலங்களில் பல முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அதனால் கட்சி பாதிக்கப்படவில்லை" என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அண்ணாமலை தற்போது தனக்கென தனி அரசியல் பாதையை அமைத்துக் கொண்டு செல்கிறார் என்றும், அவர் தேர்வு செய்த பாதையில் செல்லட்டும் என்றும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    தமிழிசை சௌந்தரராஜன்

    இதன்பின்னர், "அண்ணாமலை பற்றி இனிமேல் யாரும் பேசக் கூடாது" என்று அமித் ஷா கூட்டத்தில் தெளிவாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துதான் தற்போது தமிழக பாஜக வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. கூட்டத்தின் போது முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பெயரும் அடிபட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலை குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்தது தொடர்பாக அமித் ஷா அதிருப்தி தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    நயினார் நாகேந்திரன்

    மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூட அமைதியாக இருக்கும் நிலையில், அண்ணாமலை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழல் நிலவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமித் ஷா பேசியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    பாஜக மறுசீரமைப்பு

    குறிப்பாக, கட்சிக்குள் அமைப்பு ரீதியான பல மாற்றங்கள் விரைவில் செய்யப்படலாம் என்றும், செயல்படாத நிர்வாகிகளுக்கு இனி முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கருத்துக்கு தேசிய தலைவர் நிதின் நபினும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    English Summary

    Discussion over Annamalai's exit and BJP's future strategy gains attention after reported remarks attributed to Amit Shah.