சென்னை: தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் பெயர் அண்ணாமலைதான். பாஜகவில் இருந்து அவர் விலகப் போகிறார், புதிய கட்சி தொடங்கப் போகிறார் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று அவரது டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அண்ணாமலை அளித்ததாக கூறப்படும் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை ஏற்க மறுத்துள்ளதாகவும், அமித் ஷா சில ஆஃபர்களை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகிய பிறகு, அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்தன. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியதற்கு பிறகு அவருக்கு கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
இது அண்ணாமலை மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றது.
ஆனால் பின்னர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து தமிழக பாஜகவின் எதிர்காலம் குறித்து கட்சிக்குள்ளேயே பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இந்த சூழலில், தனது பிறந்தநாளான ஜூன் 4-ஆம் தேதி புதிய அரசியல் கட்சி அல்லது புதிய அரசியல் இயக்கம் குறித்த அறிவிப்பை அண்ணாமலை வெளியிடலாம் என்ற தகவல்கள் பரவின. அவரது ஆதரவாளர்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி எதிர்பார்ப்பை அதிகரித்தனர். இந்த பரபரப்பான சூழலில் நேற்று மாலை அண்ணாமலை திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியபோது, "இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதில் சொல்கிறேன்" என்று மட்டும் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், டெல்லி சென்ற அண்ணாமலை, முதலில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். மேலும் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது, கட்சியின் தற்போதைய நிலை, தமிழக அரசியல் சூழல் மற்றும் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து அண்ணாமலை விளக்கியதாக கூறப்படுகிறது. அதோடு, பாஜகவில் இருந்து விலக விரும்புவதாக கூறி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் சமர்ப்பித்ததாக தகவல் பரவியது. ஆனால் அந்த கடிதத்தை பாஜக தேசிய தலைமை ஏற்க மறுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அண்ணாமலைக்கு என தனித்துவமான ஆதரவாளர் வட்டம் உருவாகியிருப்பதையும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதையும் டெல்லி தலைமை கவனத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை முழுமையாக கட்சியை விட்டு வெளியேறினால், தமிழகத்தில் பாஜக கட்டியெழுப்ப முயன்ற அரசியல் வளர்ச்சிக்கு அது பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தலைமைக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவரை எந்த வகையிலும் கட்சிக்குள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் தேசிய தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தேசிய அளவிலான முக்கிய பொறுப்பு வழங்குவது, மாநிலங்களவை வாய்ப்பு, மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு போன்ற பல்வேறு ஆஃபர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மறுபுறம், தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அண்ணாமலை - நயினார் நாகேந்திரன் இடையிலான கருத்து வேறுபாடுகளை சரிசெய்யும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. அமித்ஷா முன்னிலையில் இரு தரப்பினருடனும் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனை நடத்தி சமரச சூழலை உருவாக்க டெல்லி தலைமை முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அண்ணாமலை தனது முடிவில் உறுதியாக இருக்கிறாரா அல்லது தேசிய தலைமை முன்வைக்கும் சமரச யோசனைகளை ஏற்கப் போகிறாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஜூன் 4-ஆம் தேதி அவர் வெளியிட உள்ளதாக கூறப்படும் அறிவிப்பு தமிழக அரசியலில் அடுத்த பெரிய திருப்பமாக அமையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்ணாமலை பாஜகவிலேயே தொடர்வாரா, தேசிய அரசியலுக்கு செல்வாரா அல்லது தனிக்கட்சியை ஆரம்பிப்பாரா? என்பது குறித்து நாளைக்குள் தெரிய வரும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.அண்ணாமலை
டெல்லி பயணம்
அமித் ஷா
தமிழக பாஜக
அமைச்சரவையில் வாய்ப்பு
நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை தனிக்கட்சி