சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி அறிக்கை அளிக்கும்படி அமித்ஷாவின் மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் அறிக்கை கோரியுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி நாளில் மட்டும் 10க்கும் அதிகமான கொலைகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் இந்த குற்றச்சாட்டை தமிழக அரசும், காவல்துறையும் மறுத்தது. 8 கொலைகள் மட்டுமே நடந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான விவகாரம் பேசும்பொருளானது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்துவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர். முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின், ''சட்டம் ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. நிர்வாகம் கோமா நிலையில் உள்ளது'' என சாடியிருந்தார். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பிற எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில் தான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த விரிவான அறிக்கையை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீப காலமாக நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்தும், பொது அமைதியை பேண மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநரின் மதிப்பீட்டை மத்திய அமைச்சகம் கோரியுள்ளது. தமிழகத்தில் பொதுப் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ள அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தலைநகர் தில்லியில் பேச்சு அடிபடுகிறது. தற்போது தமிழகத்தில் உள்துறை பொறுப்பை முதல்வர் விஜய் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இதனால் இந்த கொலைகளுக்கு முதல்வர் விஜய் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நேரடியாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளன. இது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியதால் நேற்று அவரசமாக மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர் அர்லேகரிடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது.