சென்னை வந்த அமித்ஷா.. முதல்வரான பின் முதல்முறையாக நட்சத்திர விடுதியில் சந்தித்த விஜய்! பின்னணி என்ன?

  • சென்னை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், அவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு நடத்தி இருக்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின் விஜய் முதல்முறையாக அமித்ஷாவை சந்தித்திருப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    Advertisement

    மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படும். ஆனால் 2022ஆம் ஆண்டுக்கு பின் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 31வது முதல்வர்கள் மாநாடு இன்று சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கி இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

    Advertisement

    இந்த மாநாட்டில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், கேரளம் முதல்வர் சதீஷன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா சார்பாக துணை முதல்வர் மல்லுபாட்டி விக்ரமார்கா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல் அந்த மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, முதலீடு, கட்டமைப்புகள், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், எல்லை பிரச்சனைகள், பேரிடர் மேலாண்மை, கூட்டுறவை பலப்படுத்துவது, குற்றங்கள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் வந்துவிட்டனர்.

    Advertisement

    இந்த நிலையில் 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பயணித்து வருகிறார். இதனிடையே அமித்ஷாவை வரவேற்க முதல்வர் விஜய் கோவளத்தில் உள்ள விடுதிக்கு வந்துள்ளார்.

    முதல்வரான பின் விஜய் முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட போதும் கூட, பிரதமர் மோடியை மட்டுமே விஜய்யால் சந்திக்க முடிந்தது. தற்போது சென்னை வந்துள்ள அமித்ஷாவை முதல்வர் விஜய் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று இரவு விருந்தை தென் மாநில முதல்வர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா அமர்ந்து சாப்பிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    English Summary

    Amitshah: CM Vijay Meets Union Home Minister AmitShah in Chennai During Southern CMs' Conference