சென்னை வந்த அமித்ஷா.. வரவேற்க வராத எடப்பாடி பழனிசாமி.. பின்னணியில் எஸ்பி வேலுமணி விவகாரம்!

  • சென்னை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க அமித்ஷா சென்னை வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவரை வரவேற்க சென்னை விமான நிலையம் வரவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அமித்ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    Advertisement

    தென் மாநில முதல்வர்கள் மாநாட்டுக்காக மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார். இன்று இரவு கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கும் அமித்ஷா, நாளை காலை 10.30 மணிக்கு தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பங்கேற்கிறார். இதன்பின் மதிய விருந்தை மாநில முதல்வர்களுடன் சாப்பிட உள்ளார்.

    Advertisement

    இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக நிர்வாகிகளை 2.30 மணிக்கு சந்திக்க உள்ளார். இதையடுத்து நாளை மாலை மீண்டும் டெல்லி பயணிக்க உள்ளார். அமித்ஷாவின் இந்த பயணத்தின் போது எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பதாக இருந்ததாக தகவல் வெளியாகியது. என்டிஏ கூட்டணி தோல்வி அடைந்த சூழலில், அமித்ஷாவின் முதல் தமிழ்நாடு பயணம் இதுவாகும்.

    இதனால் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அமித்ஷா சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பார் என்று பேச்சுகள் எழுந்தன. குறிப்பாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோருடன் மோதல் போக்கை முடிவுக்கு கொண்டு எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    Advertisement

    இந்த சந்திப்புக்கான ஆலோசனைகள் முதற்கட்டமாக நடந்த நிலையில், கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே காரணமாக பார்க்கப்படுகிறது. எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் விவகாரத்தை பற்றி பேச வேண்டாம் என்று அமித்ஷா தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியவரிடம் எடப்பாடி பழனிசாமி நேரடியாகவே கூறிவிட்டாராம்.

    அதிமுகவின் நன்மைக்காகவே பேச நினைத்தோம் என்று கருதிய அமித்ஷா, உடனடியாக சந்திப்பையும் ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் உடனான சந்திப்பும் கடைசி நிமிடங்களில் ரத்தாகி இருக்கிறது. இதனிடையே சென்னை விமான நிலையம் வந்த அமித்ஷாவை வரவேற்க கூட எடப்பாடி பழனிசாமி வரவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தமிழக அரசியல் போக்கை அமித்ஷா நாளை பாஜக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்கு பின் அறிந்து கொள்வார் என்று பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல்வர் விஜய்யும் முதல்முறையாக அமித்ஷாவை வரவேற்று சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English Summary

    Amitshah: Edappadi Palaniswami Absent at Airport for AmitShah and Meeting Called Off at the Last Minute