சென்னை: முதல்வர் விஜய் நடவடிக்கைகளால் அம்மா உணவகத்தில் பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலே 2022 ஆம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்ததாக மேயர் பிரியா கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்த, அம்மா உணவகங்களை பராமரிப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். மேலும், அதற்கான நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன. அம்மா உணவகங்களில் தவெக அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
அதைத்தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி தரப்பில் கடந்த ஜூலை 17ஆம் தேதி அம்மா உணவகங்களில் மக்களின் வருகை அதிகரித்துவிட்டதாக செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, சென்னையில் உள்ள 383 அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவு வழங்குவதன் அடிப்படையில் இந்த உணவகங்களை தினசரி சராசரியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 164 பேரில் இருந்து 1 லட்சத்து 4 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்படும் நிலையில் சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் 87 லட்சத்து 60 ஆயிரத்து 489 ரூபாய் வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது 1 கோடியே 35 லட்சத்து 78 ஆயிரத்து 548 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ஆம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டில் ரூ.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன. அம்மா உணவகங்களின் கட்டிடங்கள் புனரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது. இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது." எனத் தெரிவித்துள்ளார்.