முதல்வர் விஜய் பொய்யான தகவலை கூறியிருக்கிறார்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

  • சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, அங்கு உணவு அருந்த வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்கி, தேவையான அனைத்து விதமான வசதிகளையும் உண்மையாகச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    Advertisement

    மிகக்குறைவான ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கும் உணவகங்கள், தரமான சமையல் உபகரணங்கள் இல்லாததால் உணவின் தரம் குறித்து அவ்வப்போது எழும் பல்வேறு விமர்சனங்கள் என அவலங்களுக்கு மத்தியில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் இவை அனைத்தையும் சீர்செய்ய வலியுறுத்தி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் சூழலிலும், தவெக ஆட்சிக்கு வந்தபின்பு 630 அம்மா உணவகங்களைச் சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதாகப் முதல்வர் விஜய் பொய்யான தகவலை கூறியிருக்கிறார். இந்த பேச்சு ஏழை மக்களை வாக்கு அரசியலுக்காக ஏமாற்றும் செயலாகும்.

    Advertisement

    எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, அங்கு உணவு அருந்த வரும் ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்கி, தேவையான அனைத்து விதமான வசதிகளையும் உண்மையாகச் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தினகரன் கூறியுள்ளார்.

    விஜய் மீது சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளதாக மக்கள் தெரிவித்தார்கள். நாங்கள் தூயசக்தி, வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என முதல்வர் விஜய் சொல்கிறார். ஆனால், இருப்பதிலேயே அதிகமாக தவெக பணம் கொடுத்துள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட கட்சியின் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    Advertisement

    தவெக கூட்டணியில் பாமக இணைவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளது குறித்து விளக்கம் அளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி ஆகியோர், இது வதந்தி எனக் கூறியுள்ளனர். எனவே நாங்களும் இதனை வதந்தி என்றே நம்புகிறோம். தவெக எந்த விஷயத்திலும் வெளிப்படைத் தன்மையோடு கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை. அதைப்போலவே பாமக விஷயத்திலும் அவர்கள் கடைபிடிக்கிறார்கள்.

    தாராபுரத்தில் போட்டியிடும் தவெக வேட்பாளர், தான் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்தேன் என சொல்கிறார். அப்படியானால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளுக்கு எல்லாம் ஆளும் கட்சி எதுவும் செய்யாது என்பதை முதல்வரை வைத்துக்கொண்டே அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

    Advertisement

    அவர் அனைத்து மக்களுக்குமான முதல்வர். அவர் யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும். 'ஆளும் கட்சியில் சேர்ந்தால் தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும்' என தவெக வேட்பாளர் சொன்னதற்கு முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.

    English Summary

    TTV Dhinakaran has accused Chief Minister Vijay of making false statements regarding Amma Unavagam.