ஸ்டாலினை பற்றி பேசியது ரொம்ப தப்பு.. இடைத்தேர்தல் நேரத்தில் டோனை மாற்றும் டிடிவி தினகரன்?

  • சென்னை: கடந்த ஒரு வாரமாகவே மிசா மற்றும் ஸ்டாலின் கைது தொடர்பான விவகாரம் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார். அரசியல் ரீதியாக விமர்சிப்பது வேறு என்றும் மிசா கைதை இழிவிபடுத்தி பேசுவது வேறு எனவும் சாடியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் இப்போது இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்திய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறார்.

    Advertisement

    டிடிவி தினகரன்

    அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "ஒரு தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் வரும்? அந்த சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் மறைந்த பிறகுதான் இடைத்தேர்தல் வரும். இப்போது எப்படி வந்திருக்கிறது? அவர்கள் பதவி ஆசையில், சுயநலத்தில் தாங்கள் வெற்றி பெற்ற கட்சிக்கும், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் எதிராக.. சாப்பிட்ட கை ஈரம் காய்வதற்குள் துரோகம் செய்வது போல.. ஒரே மாதத்தில் ராஜினாமா செய்தார்கள்.

    இந்த இடைத்தேர்தல் என்பது இது போன்ற துரோகிகளுக்கு பாடம் புகட்டுகின்ற தேர்தல்! மக்கள் அவர்களுக்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். கடந்த காலத்தில் இடைத்தேர்தல் நடந்திருக்கிறது. ஆனால் இந்த ஆளுங்கட்சி நான்கு மாதத்திற்குள் எவ்வளவு விமர்சனங்களை மக்களிடம் எதிர்கொண்டிருக்கிறது!

    Advertisement

    மீனவர்கள்

    இன்றைக்கு மீனவ சகோதரர்களின் நிலைமையைப் பாருங்கள். ஆண்டாண்டு காலமாக அவர்கள் வாழ்ந்து வருகின்ற மீனவர் கிராமப் பகுதியில் போய் தலைமைச் செயலகம் கட்டுவோம் என்கிறார்கள். யாரோ ஒரு ஜோதிடர் சொன்னார் என்பதற்காகக் கடற்கரையில் உயரமான கட்டடம் கட்டுவதற்கு, அவர் தன் சொந்தப் பணத்திலிருந்தா கட்டப் போகிறார்? அது எந்த மண்டலத்தில் வருகிறது? அங்கு எப்படிக் கட்ட முடியும்? அதற்கு அனுமதி கிடைக்குமா? என பல கேள்விகள் உள்ளன

    20 லட்சம் சதுர அடியில் கட்ட போவதாக சொல்கிறார்கள். அதற்கான இடம் இருக்கிறதா? அவ்வளவு பெரிய கட்டுமானத்திற்கு அனுமதி கிடைக்குமா? அந்தப் பகுதி எவ்வளவு நெருக்கடியானது, எவ்வளவு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளன, தினமும் அங்கு எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட இடத்தில் போய் தலைமைச் செயலகத்தை கட்ட நினைப்பது முட்டாள்தனமான முடிவு. மீனவ மக்களின் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளித்தார்கள்.

    Advertisement

    அனைவரும் போராட்டம்

    புதிய ஆட்சிக்கு டைம் வேண்டும் என்று சிலர் கூறலாம். ஆனால் இன்றைக்கு போராடாதவர்கள் யாராவது இருக்கிறார்களா? செவிலியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தல் வாக்குறுதியில் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறிவிட்டு, இப்போது அதை வழங்க மறுக்கிறார்கள்? அதேபோல் ஆசிரியர்களும் போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. அதை கேட்டால், பல கட்சி பலராமன் போன்ற அந்த அமைச்சர், "காற்று இல்லை, காற்றாலை மின்சாரம் இல்லை, நீர் இல்லை" என்று சாக்கு போக்கு சொல்கிறார். இன்றைக்கு கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரே இவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார். "ஏன் இவர்களுக்கு ஆதரவளித்தோம்?" என்று எண்ணும் அளவுக்குத்தான் இருக்கிறது.

    Advertisement

    இதுவரை கேள்விப்படாத அளவிற்கு தமிழ்நாட்டில் ஓர் முதிர்ச்சியற்ற ஆட்சி நடக்கிறது. குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல இவர்களிடம் ஆட்சி சிக்கியிருக்கிறது. இதற்குத் தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக ஒரு முடிவு கட்டுவார்கள். இந்த ஆட்சியை பற்றி பேசுவதே வீண் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

    ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த டிடிவி

    எதிர்க்கட்சியாக இருந்தாலும், 50 ஆண்டுக்கால அரசியல் வரலாறு கொண்டவர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின். கருணாநிதி மகனாக இருந்தாலும், படிப்படியாக முன்னேறி, தன் சொந்த முயற்சியால் 2021ல் முதல்வரானவர். அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது உலகத்திற்கே தெரியும். ஆனால், ஒரு கத்துக்குட்டி வந்து, குதர்க்கமாகவும் வன்மமாகவும் பேசுகிறது.. ஒரு வருடத்திற்கு முன்பு அவர் எந்தக் கட்சியில் இருந்தார் என்றே தெரியாது; அப்படிப்பட்டவர் இன்று கேள்வி கேட்கிறார்.

    Advertisement

    அரசியல் ரீதியாக அவரை நாம் விமர்சனம் செய்வது வேறு. ஆனால் அவர் மிசாவில் கைது செய்யப்பட்டுச் சிறையில் தாக்கப்பட்டதை இழிவுபடுத்தும் விதமாக பேசுவது ஏற்க முடியாதது. இதை கண்டித்து திமுகவினர் கோபமாக பேசினால் அவர்கள் மீது வழக்கு போடுகிறீர்கள்; இவ்வளவு குதர்க்கமாகப் பேசும் உங்கள் மீது யார் வழக்குப் போடுவது?" என்று சரமாரியாக சாடினார்

    English Summary

    AMMK general secretary TTV Dhinakaran said political criticism of Stalin is different from making derogatory remarks(ஸ்டாலினுக்கு ஆதரவாக வந்த டிடிவி தினகரன்): AMMK TTV Dhinakaran latest news in tamil.