சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமாசங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. உமாசங்கரின் சகோதரி ரேணுகாதேவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் எடிட்டர் உமாசங்கரை சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் இருந்த போது, இணையதளத்தில் வெளியானது. பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் ஃப்ரீலான்ஸ் எடிட்டரும், பிரபல துணிக்கடை மேலாளருமான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் கைது செய்யபட்டார். அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர், ஜூலை 30 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உமா சங்கரின் சகோதரி ரேணுகா தேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தனது சகோதரர் துணிக்கடையில் மேலாளராக பணியாற்றுகிறாரே தவிர, சினிமா எடிட்டர் இல்லை எனவும் மனதை செலுத்தாமல், இயந்திரத்தனமாக காவல் ஆணையர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் உமா சங்கர் மீதான குண்டர் தடுப்பு காவல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு, உமாசங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.