நரிக்கு திராட்சை புளித்துவிட்டது.. காங். வெற்றிக்கு திமுக காரணமா? உதயநிதியை விளாசிய ஆனந்த் சீனிவாசன்

  • சென்னை: ''சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று உதயநிதி எதிர்பார்த்தார். ஆனால் நடக்கவில்லை. இதனால் 'நரிக்கு திராட்சை புளித்தது' போல் விமர்சனம் செய்கிறார். உதயநிதியின் ஏமாற்றமடைந்து தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் மீது பழிபோடுவது பொறுப்பற்ற செயல். திமுக ஆதரவில் காங்கிரஸ் வென்றது அபத்தமானது'' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வென்றது எப்படி? என்பது பற்றி பாயிண்ட் பாயிண்ட்டாக விளக்கி உள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக தனிப்பெரும்கட்சியான நிலையில் காங்கிரஸ் கூட்டணி மாறியது. முதல்வர் விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் சேர்ந்தது. காங்கிரஸ் கட்சியின் 2 பேருக்கு அமைச்சர் பதவியை முதல்வர் விஜய் வழங்கி உள்ளார்.

    Advertisement

    இதனால் திமுக கடும் கோபமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை துரோகி, முதுகில் குத்துவிட்டது என சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    உதயநிதி ஸ்டாலின்,''20 ஆண்டுகளுக்கும் மேலாக நம்முடைய முதுகின் மேல் ஏறி காங்கிரஸ் சவாரி செய்தது. இப்போது நம்முடைய முதுகில் குத்திவிட்டுப் போயிருக்கிறது; இதை யாரும் மறந்துவிடாதீர்கள். பாஜகவின் தொடர் வெற்றிக்கு நான் கூட நரேந்திர மோடியும். அமித் ஷாவும்தான் காரணம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்குக் காரணம், முதன்மைக் காரணம் காங்கிரஸ் தான். இந்த காங்கிரஸையும் நம்முடைய தலைவர்தான் தோளில் சுமந்து, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் சுமந்து கொண்டிருந்தார்.

    Advertisement

    நம்முடைய தொண்டர்களும் நாமும் இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துக்கொண்டிருந்தோம்.
    குறைந்தபட்ச ஒரு நன்றியோ, நாகரிகமோ இல்லாத காங்கிரஸை இனி எந்தக் காலத்திலும் நாம் நம்பக் கூடாது. எந்தக் காலத்திலும் நாம் அருகில் சேர்க்கக் கூடாது''என சாடியிருந்தார்.

    இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஆனந்த் சீனிவாசன் கடும் பதிலடியை கொடுத்துள்ளார். பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பத்திரிகை மற்றும் தகவல் தொடர்பு துறையின் தலைவராக உள்ளார். இந்நிலையில் தான் அவர் கூறியுள்ளதாவது:

    Advertisement

    ''என்னுடைய நல்ல நண்பரும், என்னுடைய தொகுதியில் வென்ற திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி காங்கிரஸ் கட்சியை நேற்று விமர்சித்துள்ளார். 'நரிக்கு திராட்சை புளித்தது' போன்ற கதை நடந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வர எதிர்பார்த்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இதனால் விமர்சனம் செய்கிறார். உதயநிதியின் ஏமாற்றமடைந்து தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் மீது பழிபோடுவது பொறுப்பற்ற செயல்.

    காங்கிரஸின் வெற்றிகள் திமுகவால்தான் என கூறுவது நகைப்புக்குரியது. கன்னியாகுமரி கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸின் கோட்டை. இப்போது வென்றுள்ள ஐந்து தொகுதிகளில் மூன்று கன்னிகுமரி மாவட்டத்தில் தான் உள்ளது. 4வது தொகுதி மயிலாடுதுறை. அங்கு சிறுபான்மையின மக்களின் ஆதரவால் காங்கிரஸ் வெற்றி கிடைத்தது. இந்த வாக்குகளை திமுக கொண்டு வந்ததாக சொல்வது அபத்தமானது.

    Advertisement

    மதுரையில் 11 தொகுதிகளில் 10 இடங்களில் திமுக தோற்றுவிட்டது. 2 அமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் மட்டுமே ஒரு தொகுதியில் வென்றுள்ளது. மேலூரில் திமுக ஒருபோதும் வென்றதில்லை. அங்கு அதிமுக, காங்கிரஸுக்கிடையேய்தான் வெற்றி மாறி மாறி வந்துள்ளது.

    கடந்தமுறை மேலூரில் அதிமுக வென்றது. ஆனால், அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கும், அமித் ஷாவிற்கும் வாக்களிப்பது என மக்கள் உணர்ந்தனர். தமிழ்நாட்டில் மதவாத பாஜக தேவையில்லை என மக்கள் உணர்ந்ததால் அதிமுகவைத் தோற்கடித்து காங்கிரஸை ஆதரித்தனர். எனவே, காங்கிரஸ் வெற்றிகளுக்கு திமுக மட்டுமே காரணம் என்பது நகைப்புக்குரியது. இதுபற்றி மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்று சாடியுள்ளார்.

    English Summary

    Congress Anand Srinivasan slams Udhayanidhi Stalin: He says, "Udhayanidhi expected that the DMK would emerge victorious in the Assembly elections and capture power. However, that did not happen. Consequently, he is now offering criticisms akin to the fable of 'the fox and the sour grapes.' It is an irresponsible act for a disappointed Udhayanidhi to cast the blame for the electoral defeat upon the Congress party. The assertion that the Congress party won solely on the strength of DMK support is absurd."