சென்னை: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால், இன்று மாலை 5 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், DTCP, CMDA உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 26-ம் தேதி அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். பிறகு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நவம்பர் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை விசாரிக்க வேண்டியிருப்பதால், அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தனர். போலீஸ் காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர்கள், ஏற்கனவே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்கும் காலத்தை மாற்றிய அரசாணை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகே பிறப்பிக்கப்பட்டதாகவும் வாதிட்டனர். அமைச்சர் என்ற முறையில் கூட்டங்களில் பங்கேற்றதற்காக மட்டும் அவரை குற்றவாளியாக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும், ஜெயிலில் வழங்கப்படும் உணவு, தூக்கம் தொடர்பான பிரச்சினைகளையும் முன்வைத்து, உடல்நிலைக்கு ஏற்ற உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மறுபுறம், பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கு சென்றது, சொத்து விவரங்கள் என்ன, முத்துக்குமார், சுரேஷ் உள்ளிட்டோரின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவல் அவசியம் என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. 2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, போலீஸார் கோரிய 5 நாட்களுக்கு பதிலாக 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணையின்போது அன்பில் மகேஷுக்கு துன்புறுத்தல் அளிக்கக்கூடாது, உரிய உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், தினமும் விசாரணை முடிந்ததும் வழக்கறிஞரை 10 நிமிடங்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன்படி, நவம்பர் 2-ம் தேதி மதியம் 1 மணி முதல் நவம்பர் 4-ம் தேதி மாலை 5 மணி வரை போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். தன் மீது லஞ்சம் பெற்றதற்கான நேரடி ஆதாரங்கள் இல்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டில் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு மனுக்களும் நாளை அதாவது நவம்பர் 5 விசாரணைக்கு வர உள்ளன. இந்த நிலையில், 3 நாட்கள் போலீஸ் காவல் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து, இன்று மாலை 5 மணிக்குள் அன்பில் மகேஷை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும். அப்போது போலீஸ் காவல் விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அன்பில் மகேஷை மீண்டும் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது... நாளை நடைபெறவுள்ள ஜாமீன் மனு விசாரணையும் இந்த வழக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது...!!!அன்பில் மகேஷ் வழக்கு
நீதிமன்றத்தில் வாதம்
3 நாள் போலீஸ் காவல்
ஜாமீன் மனு
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்