சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் , திமுக நிர்வாகியுமா அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் திமுக வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார்.
திமுக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை கூறுகையில், "முத்துக்குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முத்துக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியிருப்பதாகவும், அதன்பிறகு அவரை அமைச்சர் அன்பில் மகேஷுடன் நேருக்கு நேர் வைத்து விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால், முத்துக்குமார் சரணடைந்து கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிவிட்டன. இத்தனை நாட்களாக போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் இப்போது எழும் ஒரே கேள்வி. அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும்போது, அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுப்பதற்காக, விசாரணையைத் தாமதப்படுத்தி தவறான காரணங்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசுத் தரப்பின் நோக்கமாகத் தெரிகிறது. முத்துக்குமார் சரணடைந்துவிட்டார். அவரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடத்த வேண்டிய தேவை இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்குவதைத் தடுப்பது எது? அவர் காலவரையின்றி சிறையில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசுத் தரப்பு திட்டமிட்டு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது. இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். உயர் நீதிமன்றத்தின் மூலம் அன்பில் மகேஷுக்கு ஜாமீன் பெற முடியும் என்று நம்புகிறோம்." இவ்வாறு கூறியுள்ளார்.