சென்னை: தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதற்கு அன்பில் மகேஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கித் தருவதாகக் கூறி, ரூபாய் 100 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், பி.டி.அரசகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தினர். அதைத்தொடர்ந்து, அன்பில் மகேஷுக்கு சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கால அவகாசம் வழங்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.