7 மணி நேரம்.. 246 கேள்விகள்.. துளைத்தெடுத்த CCB.. விசாரணைக்குப் பின் அன்பில் மகேஷ் பேட்டி!

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சுமார் 7 மணி நேரம் நடத்திய விசாரணை நிறைவு பெற்ற நிலையில், விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியின் போது தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழை பெறவும் 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பி.டி.அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த வழக்கின் விசாரணையின்போது கிடைத்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டது. இதையடுத்து, அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்தினர்.

    திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் கடந்த 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதே போல், சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தினர்.

    Advertisement

    இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், டிஸ்க்குகள், ஹார்டு டிஸ்க் பொருத்தப்பட்ட 2 டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள், காசோலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வரும் நிலையில், இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, சம்மனை ஏற்று சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு இன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விசாரணைக்காக ஆஜரானார்.

    Advertisement

    இந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆதாரங்கள் மற்றும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பில் மகேஷிடம் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது.

    மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நிறைவு பெற்றவுடன் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அன்பில் மகேஷ். அப்போது காவல்துறையினர் வைத்திருந்த 295 கேள்விகளில் 246 கேள்விகளை தன்னிடம் கேட்டதாக கூறினார். மேலும், அவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தான் பொறுமையாக பதிலளித்ததாகவும், அதனை அவர்கள் பதிவு செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

    Advertisement

    மேலும், விசாரணையில் கேள்விகள் மீதமிருப்பதால், அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு சம்மன் அனுப்புவதாக காவல்துறையினர் தெரிவித்ததாகவும், எப்போது அழைத்தாலும் தான் வந்து பதிலளிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்ததாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

    அப்போது, சோதனையின்போது உங்கள் வீட்டில் இருந்து சில ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், "அந்த ஆவணங்களில், வழக்கிற்கு தொடர்புடைய தகவல்கள் எதுவும் இல்லை. பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது ரிவ்யூ மீட்டிங் நடந்த ஆவணங்களை வைத்திருந்தேன். பட்ஜெட் முடிந்த பிறகு ஒரு ரிப்போர்ட் தயார் செய்து வைத்திருந்தேன். அதையெல்லாம் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க பொய்யான வழக்கு" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Former DMK Minister Anbil Mahesh Poyyamozhi has provided an explanation regarding the proceedings of the inquiry conducted by the Central Crime Branch police today, which lasted for approximately seven hours.