சென்னை: பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டுல் நேற்று அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில், அன்பில் மகேஷ் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி என 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு நடத்திய நிலையில், சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள், வழக்கு தொடர்பான 118 ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்புகள், 2 ஹார்டு டிஸ்குகள், 1 Tablet, 1 Apple I pad பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறதாம் அரசுத் தரப்பு.
திமுகவில் கலைஞர் குடும்பத்தைப் போலவே மூன்று தலைமுறைகளாக அரசியலில் இருப்பது அன்பில் மகேஷ் பொய்யாமொழி குடும்பம். அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி வரிசையில் அன்பில் மகேஷும் அரசியலில் இருக்கிறார்.
திருச்சியை பூர்வீகமாக கொண்ட அவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும் அன்பில் மகேஷ் இருந்தார். இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், ஸ்டாலின் அமைச்சரவையிலும் இடம் பெற்றார். குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி கல்வித்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்களிடையே பிரபலமானார். அது மட்டும் இல்லாமல் சாரணர் சங்க தேர்தலிலும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முக்கிய தலைகள் தோல்வியை சந்தித்த நிலையில், விஜய் அலையில் அடிபட்டவர்களில் அன்பில் மகேஷும் ஒருவர். இதையடுத்து சற்று காலம் அவர் அமைதியாக இருந்த நிலையில் பள்ளி கல்வித் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு அவருக்கு சிக்கலாக இருந்தது. அதாவது 2021 முதல் 2026 வரை அன்பு மகேஷ் பள்ளிக்கல்வித்துறை பொறுப்பை கவனித்தபோது பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், தரம் உயர்வு, டிடிசிபி அனுமதி உள்ளிட்ட அனுமதி பெற்று தருவதாக கூறி பணம் பெற்றதாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பை சேர்ந்த இளங்கோவன் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கூறப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரும், தனியார் பள்ளி அசோசியேசனை நடத்தி வந்த பிடி அரசகுமார் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள், மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்தில் சோதனைகளும் நடைபெற்றது. இதுவரை பள்ளி கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளி அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், அனுமதி வழங்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல், அதற்காக கொடுக்கப்பட்ட மனுக்கள், வங்கிப் பரிவர்த்தனை பதிவுகள், செல்போன் கம்ப்யூட்டர்கள், ஹார்ட் டிஸ்க்கள் என ஏற்கனவே சிக்கி உள்ளன. தற்போது கிடைத்த தகவல்களின்படி சுமார் 170 பள்ளிகளிடம் தலா இரண்டு கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக புகார்கள் மலை போல குவிந்து வரும் நிலையில், நிதி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில் பிடி அரசகுமார் அளித்த தகவல்களின் அடிப்படையில் அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று அதிரடியாக சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சொந்தமான நான்கு இடங்களிலும் அவரது உதவியாளர் வாளாடி கார்த்திக்கு தொடர்புடைய இரண்டு இடங்களிலும் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி காசோலைகள், வங்கி தொடர்பான ஆவணங்கள், 18 செல்போன்கள், 3 லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்க்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சோதனை குறித்த தகவல் அறிந்ததும் கேஎன் நேரு உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டு முன்பு குவிந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அன்பில் மகேஷுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி உள்ள போலீசார் அடுத்ததாக 'அதிரடி' நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வங்கி காசோலைகள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை வைத்து கைது நடவடிக்கை கூட எடுக்கப்படலாம் என்கின்றன சென்னை வட்டாரங்கள்.அன்பில் மகேஷ்
பள்ளி அங்கீகார முறைகேடு
பி.டி.அரசகுமார்
ஹார்ட் டிஸ்க் பறிமுதல்
பள்ளிக்கல்வித்துறை
காசோலைகள் பறிமுதல்
'அதிரடி' நடவடிக்கை