“அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்”.. அன்பில் மகேஷ் பரபர பேட்டி!

  • சென்னை: "ஒரு அமைச்சராக இருந்து கொண்டு, லஞ்சம் கொடுத்தேன் என சட்டப்பேரவையில் கூறியுள்ள அமைச்சர் மரிய வில்சனை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்" என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எம்.எல்.ஏக்கள் காரசாரமான விவாதங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையே நிதி அமைச்சர் மரிய வில்சன் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கடந்த திமுக ஆட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    Advertisement

    நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், திமுக ஆட்சியில் பல இடங்களில் கட்டாயப்படுத்திதான் லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது. அதில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட ஒரு ஆள் நான். என்னுடைய பள்ளிக்கே லஞ்சம் வாங்கப்பட்டது. அதற்கு நானே சாட்சி. சென்னை தியாகராய நகரில் வைத்து யார் மூலமாக பணம் பெற்றார்கள் என்பதை பற்றி என்னால் சொல்ல முடியும். இது பற்றி என்மீது என்ன வழக்கு போட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்." எனக் கூறியிருந்தார்.

    அமைச்சர் மரிய வில்சனின் இந்த குற்றச்சாட்டிற்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அமைச்சராக பொறுப்பு வகித்து வரும் மரிய வில்சன் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவதே முதலில் தவறு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு என்மீது முன்வைக்கப்பட்டது. அவர்களிடம் ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டேன். பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியவரிடமும் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    அதன் அடிப்படையில் இன்று அமைச்சர் பேசினாரா எனத் தெரியவில்லை. ஒரு அமைச்சர் லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவதே தவறு. முதலில் அவரிடம் விசாரணை நடத்தவேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் கண்டிப்பாக இதுகுறித்து புகார் அளிப்போம். உடனடியாக அமைச்சரை அழைத்து விசாரிக்கவேண்டும். அன்பு மொழி, கருணை மொழி தான் தெரியும் என பேசிய அமைச்சர் மரிய வில்சன், என் மீது அவதூறு கூறுகிறார். அவர்கள் செய்வது அனைத்தும் மடைமாற்றம்." எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளர் நந்தகுமார் குற்றம் சாட்டியிருந்தார். அதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயரையும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.

    Advertisement

    இதனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன் மீதான அவதூறு பேச்சுக்கு நந்தகுமார் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும், அவதூறு பேசியதற்காக ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former Minister Anbil Mahesh Poyyamozhi has stated that the DVAC should investigate Minister Marie Wilson, who admitted in the Assembly to having paid a bribe.