டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏவில் 5000 காலிப்பணியிடங்களில் வெறும் 821-ஐ மட்டும் நிரப்புவதா? அன்புமணி

  • சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ பிரிவுகளில் 5,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 821 இடங்களை நிரப்புவதா? இளைஞர்களுக்கு துரோகம் செய்யக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்காக 821 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. குறைந்தது 3000 பணிகளுக்கு ஆள்தேர்வு நடைபெறும் என இளைஞர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே காலியிடங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

    Advertisement

    தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு &2க்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுத் துறைகளிலுள்ள சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட தொகுதி 2 பணிகளுக்கு 41 பேரும், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட தொகுதி 2ஏ பணிகளுக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு அரசுத் துறைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் மறைக்கப்பட்ட இடங்களையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு பணியிடங்களை வைத்துக் கொண்டு வெறும் 821 பேரை மட்டும் தேர்ந்தெடுப்பது போதுமானதல்ல.

    Advertisement

    இரண்டாம் தொகுதி பணிகளுக்கு வெறும் 41 பேர் காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றிலும் கூட 4 பணியிடங்கள் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்டு நிரப்பப்படாததால் ஏற்பட்ட பின்னடைவு பணியிடங்கள் ஆகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரலாற்றிலேயே இரண்டாம் தொகுதி பணியிடங்கள் இவ்வளவு குறைவாக நிரப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு 50 பேர் இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திமுக அரசின் அந்த வேதனையான சாதனையை இப்போதைய தவெக அரசு முறியடித்திருக்கிறது. இதைவிட மோசமாக இளைஞர்களை ஏமாற்ற முடியாது.

    2011&ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 16 ஆண்டுகளில் 2021, ஆகிய ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள அனைத்து ஆண்டுகளிலும் தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கு ஆள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறன்றனர். மிக அதிகமாக 2022&ஆம் ஆண்டில் 6500 பேரும், 2011&ஆம் ஆண்டில் 6241 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள ஆண்டுகளில் 2025&ஆம் ஆண்டைத் தவிர மற்றவற்றில் குறைந்தது 1086 பேர் முதல் 3842 பேர் வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும் வெறும் 821 பேரை தேர்ந்தெடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

    Advertisement

    தொகுதி 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான அடிப்படைக் கல்வித் தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு ஆகும். இந்தப் படிப்பை முடித்து விட்டு, அரசு வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை மட்டும் 60 லட்சத்திற்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 4 முதல் 5 லட்சம் பேர் இந்த எண்ணிக்கையில் இணைந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படாதது அரசின் தோல்வி ஆகும்.

    2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசுத் துறைகளில் இன்றைய நிலையில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தது 2 லட்சம் பணியிடங்கள் காலியாகக் கூடும். அவற்றையும் சேர்த்தால் புதிய அரசு ஐந்தாண்டுகளில் 8 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டியிருக்கும். அதற்கான ஆண்டுக்கு 1.50 லட்சம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்.

    Advertisement

    ஆனால், பட்டப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 461, பட்டயப்படிப்பை தகுதியாகக் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் 839, தொகுதி 1 பணிகள் 26, தொகுதி 2 மற்றும் 2ஏ பணியிடங்கள் 821 என 2147 பணியிடங்களுக்கு மட்டும் தான் 4 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப் பட்டிருக்கின்றன. இவையும் கூட முந்தைய திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டவை தான். இதே நிலை தொடர்ந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அதிகபட்சமாக 50,000 பேருக்கு கூட அரசு வேலைகளை வழங்க முடியாது; அரசுத்துறை காலிப் பணியிடங்களையும் நிரப்ப முடியாது. வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் தவெக தோல்வியடையும்.

    Advertisement

    2026&ஆம் ஆண்டில் தவெக ஆட்சிக்கு வருவதற்கு காரணம் இளைஞர்கள் தான். அவர்களுக்கு தவெக அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானவை அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்; வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித் தொகை வழங்கப்படும்; தனியார் தொழில் வணிக நிறுவனங்களில் 75% வேலைகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டம் இயற்றப்படும் என்பன தான். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது இளைஞர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். அதை செய்யாமல் இருப்பதை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ள தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்த வேண்டும். இது தவிர, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குதல், தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    PMK President Anbumani Ramadoss asks Tamil nadu government that why filling only 821 posts in TNPSC?