ரூ 1000 கோடி FQL நிதி மோசடி! இளைஞர் தற்கொலை! கேள்விகளை எழுப்பிய அன்புமணி ராமதாஸ்

  • சென்னை: ரூ.1000 கோடி நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதை தடுக்கத் தவறிய காவல்துறையே இந்த உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் முதலீடு செய்த தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர் இராசு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் அரங்கேற்றப்படும் நிலையில், அதை காவல்துறையினர் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.

    மதுரை மாவட்டம் மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எப்.க்யூ.எல் நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை காட்டி விளம்பரங்கள் செய்தது. இதற்காக தனிச் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின்படி மக்களிடம் சென்று முதலீடுகளைத் திரட்டுவதற்காக பெருமளவில் முகவர்களும் நியமிக்கப்பட்டனர். எப்.க்யூ.எல் நிதி நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பிய மக்களும் தங்களிடமிருந்த பணத்தை இலட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

    பலர் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தங்களின் நிலம் உள்ளிட்ட உடமைகளை விற்றும், அடகு வைத்தும் முதலீடு செய்தனர். ஆனால், உறுதியளித்த காலத்தில் முதலீட்டைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்த நிறுவனம் சில நாள்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராசு என்ற இளைஞர் இந்த நிறுவனத்தில் பெரும் தொகையை முதலீடு செய்ததுடன், முகவராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கில் முதலீடு திரட்டிக் கொடுத்து உள்ளார். மோசடி நிதி நிறுவனம் மூடப்பட்டு விட்ட நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட முதலீட்டாளர்களுக்கு பதில் கூற முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    அவரது தற்கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. பணம் கட்டி ஏமாந்த மக்களும் மதுரை மாவட்ட காவல்துறையில் கூட்டம், கூட்டமாக வந்து புகார் அளித்து வருகின்றன. மோசடியின் தன்மை மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு இந்த மோசடி வழக்கின் விசாரணையை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். ஆனால், பணம் கட்டி ஏமாந்த மக்களுக்கு எப்போது பணமும், நீதியும் கிடைக்கும் என்பது மட்டும் தெரியவில்லை.

    தமிழ்நாட்டில் திடீர், திடீரென மோசடி நிதிநிறுவனங்கள் தொடங்கப்படுவதும், அவை மக்களிடம் கோடிக் கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டு மூடப்படுவதும் புதிதல்ல. சராசரியாக ஓராண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய மோசடிகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஆரூத்ரா, வேலூரில் எல்.என்.எஸ். சர்வதேச நிதிச்சேவை நிறுவனம், திருச்சியில் எல்பின்ஸ் ஆகிய 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்தன.

    கோவையைச் சேர்ந்த மை வி 3 ஆட்ஸ் (MY V3 Ads) நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.2000 கோடி மோசடி செய்ததுடன், அதை அம்பலப்படுத்திய பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்ட போதிலும், ஏமாற்றப்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட மீட்டுத் தரப்படவில்லை.

    ஒன்றரை ஆண்டுகளில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகவும், ஆண்டுக்கு 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் மோசடி நிதி நிறுவனங்கள் கூறியதை மக்கள் அப்படியே நம்பியது தான் இந்த மோசடிக்கு காரணம் ஆகும். அதிக வட்டி, நட்சத்திர விடுதிகளில் அறிமுக நிகழ்ச்சிகளை நடத்துதல், முதலீடு செய்வதவர்களில் ஒரு சிலருக்கு அதிக வட்டியை வழங்கி, அவர்கள் மூலம் மக்களிடம் வாய்மொழி பிரச்சாரம் செய்ய வைத்தல் போன்றவற்றின் மூலம் தான் மோசடி நிறுவனங்கள் கவர்ந்திழுத்து ஏமாற்றுகின்றன.

    ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மோசடிகளால் ஏராளமானமானோர் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும், அதனால் விழிப்புணர்வு பெறாத பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு மீண்டும், மீண்டும் முதலீடு செய்து ஏமாந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது தான். முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை காட்டப்படும் போது அதை நம்பி பொதுமக்கள் ஏமாறுவது இயல்பு தான். நேர்மையான நிதி நிறுவனங்களையும், மோசடி நிறுவனங்களையும் பகுத்துப் பார்த்து முதலீடு செய்யும் அளவுக்கு ஊரக, கல்வியறிவற்ற மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை.

    இத்தகைய சூழலில், மோசடி நிறுவனங்களை தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும். அதிக வட்டி தருவதாகவும், பரிசுகளை அள்ளி வழங்குவதாகவும் அந்த நிறுவனங்கள் துண்டறிக்கைகள் மூலமாகவும், முழுபக்க விளம்பரங்கள் மூலமாகவும் தொடர் விளம்பரங்களை செய்து தான் முதலீடு திரட்டுகின்றன. இவை எதுவும் தமிழக காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தகைய நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது என்று காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு தடுத்திருக்க வேண்டும். அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. அதைச் செய்யத் தவறிய காவல்துறை தான் இந்த மோசடிக்கும், உயிரிழப்புக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

    கடந்த காலங்களிலும், இப்போதும் மோசடி செய்த நிதி நிறுவனங்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 420 போன்ற சாதாரண பிரிவுகளில் தான் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதிலிருந்து அந்நிறுவன உரிமையாளர்கள் எளிதாக தப்பிவிடக் கூடும். இதைத் தடுப்பதற்காக மோசடியாளர்கள் மீது இன்னும் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட வேண்டும். மோசடியாளர்களின் பெயர்களில் மட்டுமின்றி, அவர்களைச் சார்ந்தவர்கள், நெருக்கமானவர்கள் பெயர்களில், மோசடி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பின்னர் வாங்கப்பட்ட சொத்துகளையும் முடக்க வேண்டும்; மேலும், நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எப்.க்யூ.எல் (FQL) நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களுக்கு அவர்களின் பணத்தை உடனடியாக மீட்டுத் தர தமிழக அரசும், காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    PMK Anbumani Ramadoss says that It is shocking that a young man from Dindigul district, who was cheated after investing in FQL, a financial institution accused of defrauding people of around Rs. 1,000 crore in the southern districts, including Madurai and Dindigul, by luring them with promises of doubling their investments, has died by suicide.