நகர்ப்புறங்களில் மீண்டும் சொத்து வரி உயர்வா? பாமக அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!

  • சென்னை: நகர்ப்புறங்களில் சொத்து வரியை மீண்டும், மீண்டும் உயர்த்தக் கூடாது, மாநில நிதி
    ஆணைய பரிந்துரையை ஏற்கக் கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரியை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கவுள்ளதாக ஏழாம் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் அலாவுதீன் தெரிவித்திருக்கிறார். உள்ளாட்சிகளின் நிதிநிலையை மேம்படுத்த ஏராளமான வழிமுறைகள் இருக்கும் போது, மீண்டும், மீண்டும் மக்களை பாதிக்கும் சொத்துவரி உயர்வையே அனைத்து அரசுகளும் கையில் எடுப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

    Advertisement

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக சொத்துவரி உயர்வு, வரி அல்லாத வரிவாயை அதிகரித்தல் உள்ளிட்ட மூன்று அம்சங்களை அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தெரிவித்தார். அவருடன் இருந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி , ''உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த வருவாயை அதிகரிக்க, சொத்து வரி உள்ளிட்டவைகளை அதிகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    உள்ளாட்சி அமைப்புகள் நிதித் தற்சார்பு பெற்றால் மட்டுமே மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியும்; அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மீண்டும், மீண்டும் சொத்துவரியை உயர்த்தி அதன் மூலம் மக்களைச்சுரண்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    Advertisement

    முந்தைய திமுக ஆட்சியில் 2022-ஆம் ஆண்டில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன் சுமையையே மக்களால் தாங்க முடியாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை 6% சொத்து வரி உயர்த்தும் முறை கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் சொத்துவரி உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

    தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை மாறவில்லை. சென்னையில் சில மாதங்களுக்கு முன் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 10 மடங்கு வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அந்த முடிவை தவெக அரசு கைவிட்டது. இத்தகைய சூழலில் மீண்டும் சொத்துவரி உயர்த்தப்படுவதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    Advertisement

    மாநில அரசின் வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பங்கை முறையாக பகிர்ந்தளித்தாலே அவை சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நிதி கிடைக்கும். ஆனால், மாநில அரசுகள் அதை செய்ய முன்வருவதில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் மத்திய அரசு எத்தகைய மேலாதிக்க அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ, அதே அணுகுமுறையைத் தான் உள்ளாட்சிகளுக்கான நிதிப்பகிர்வில் மாநில அரசும் கடைபிடிக்கிறது.

    உள்ளாட்சிகளுக்கு வருவாய் கிடைப்பதற்காக உள்ள பல வரிகளை அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் ரத்து செய்யும் மாநில அரசு, அதனால் ஏற்படும் இழப்புகளை சொத்துவரி உயர்வு மூலம் ஈடுகட்ட விரும்புவது நியாயமல்ல.

    எனவே, உள்ளாட்சிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக நியாயமான நிதிப்பகிர்வு, வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளை மட்டுமே ஏழாம் மாநில நிதி ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். ஒருவேளை சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று மாநில நிதி ஆணையம் பரிந்துரைத்தாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

    English Summary

    PMK Anbumani Ramadoss says that Seventh State Finance Commission Chairman Alauddin has stated that the Commission is planning to make several recommendations to the government, including an increase in property tax, with the objective of improving the financial position of local bodies.