10 கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? வெற்றி தறினு பேரெல்லாம் வச்சிங்களே? விஜய்க்கு அன்புமணி கேள்வி

  • சென்னை: 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும். நெசவாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக் கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    Advertisement

    கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும் உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

    விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவை தான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவின்படி சில விற்பனையகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் சில விற்பனையகங்களில் விற்பனையும், மீதமுள்ளவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்த சில வாரங்களில் 10 விற்பனையகங்களும் மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

    கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். கோ-ஆப்டெக்ஸ் என்பதே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்பதன் வணிகப் பெயர் தான் . 1935-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ-ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவு தான் இன்றைய அவலம் ஆகும்.

    Advertisement

    2025-16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67 என மொத்தம் 200 விற்பனையகங்களுடன் கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது. நடப்பாண்டில் மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ''தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்" என்று வாக்குறுதி ( எண். அறம் 2 (8) ) அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள். அதனால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    PMK President Dr. Anbumani Ramadoss urges Govt Must Withdraw Decision to Close10 Co-optex Outlets. It Should Not Betray Weavers After Making Promises!