இனிமே நீங்க தான்.. அன்புமணியிடம் மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்த ராமதாஸ்! பாமகவில் பதறும் சீனியர்ஸ்?


  • சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவந்த பாமக உள்கட்சி மோதல் முடிவுக்கு வந்துள்ளதால் பாட்டாளிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸும், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸும் சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நேரில் சந்தித்து சமாதானம் செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், கட்சிக்குள் புதிய மாற்றங்கள் உருவாகலாம் என்ற பேச்சு வலுத்துள்ளது. குறிப்பாக, அன்புமணியிடம் கட்சியின் முக்கிய பொறுப்புகள் மட்டுமல்லாமல், வன்னியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளையும் கவனிக்குமாறு ராமதாஸ் கூறியதாக வெளியாகியுள்ள தகவல்கள், ஜிகே மணி உள்ளிட்டோருக்கு 'கிலி'யை ஏற்படுத்தியுள்ளதாம்..

    Advertisement

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில், ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு வெளிப்படையாக வெடித்தது. அதன் பின்னர் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்படத் தொடங்கினர்.

    Advertisement

    கட்சியின் முக்கிய முடிவுகள், கூட்டணி அரசியல், நிர்வாக நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இரு தரப்பினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்ததால், பாமக இரு அணிகளாக செயல்படுகிறது என்ற விமர்சனமும் எழுந்தது.

    பாமக

    அந்த மோதல் தீவிரமான நிலையில், அன்புமணியை கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியதாக அறிவித்தார். அன்புமணிக்கு ஆதரவாக இருந்த மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பகுதி செயலாளர்களும் மாற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் ராமதாஸ் தனது விருப்பப்படி பலரை நியமித்தார். பொதுச்செயலாளராக முரளி சங்கர், இணைப் பொதுச்செயலாளராக முன்னாள் எம்எல்ஏ அருள், பொருளாளராக சையத் மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    Advertisement

    அன்புமணி ராமதாஸ்

    மேலும் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராகவும், அவரது மகன் சுகந்தனை மாநில செயற்குழு உறுப்பினராகவும் நியமித்தது கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தது. அன்புமணி தலைமையிலான அணி அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நிலையில், ராமதாஸ் தரப்பு சசிகலாவுடன் கூட்டணியை தேர்வு செய்தது. குறிப்பாக, அன்புமணி ஆதரவு வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலேயே எதிர் வேட்பாளர்களை நிறுத்திய சம்பவம், இரு அணிகளுக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியது.

    ராமதாஸ்

    இருப்பினும், அன்புமணி ஆதரவு அணியைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றது அவரது அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்தியது. இந்த சூழலில், ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியின் 61-வது திருமண நாளன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்புமணி, தனது மனைவி சௌமியா மற்றும் குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று ராமதாஸை நேரில் சந்தித்தார். அப்போது மகனை பார்த்த ராமதாஸ் உணர்ச்சிவசப்பட்டு அவரை கட்டித்தழுவி கண்ணீர் விட்டார். இந்த சந்திப்பு பாமக தொண்டர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    வன்னியர் சங்கம்

    இந்த சந்திப்பின்போது, "இனி கட்சியையும், வன்னியர் சங்கம் உள்ளிட்ட 34 அமைப்புகளையும் நீங்கள்தான் கவனித்துக்கொள்ள வேண்டும்" என்று அன்புமணியிடம் ராமதாஸ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், கட்சியின் முழு பொறுப்புகளையும் படிப்படியாக அன்புமணியிடம் ஒப்படைக்கும் முடிவை ராமதாஸ் எடுத்திருக்கலாம் என்ற கணிப்புகளும் எழுந்துள்ளன. இதற்கிடையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ராமதாஸ் நியமித்த நிர்வாகிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஜிகே மணி

    புதிய நிர்வாக மாற்றங்கள் நடைபெறுமா, தற்போதைய பொறுப்புகள் தொடருமா என்ற கேள்வி ஜிகே மணி டீமுக்கு மத்தியில் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பாமக வட்டாரங்களில் பேசுகையில், "இனி கட்சியை முழுமையாக வலுப்படுத்தும் பொறுப்பு அன்புமணியிடமே இருக்கும். ஆனால், பழைய கருத்து வேறுபாடுகளை மனதில் வைத்து அவர் யாரையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டார். மக்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர்களையும், கட்சிப் பணியில் தீவிரமாக செயல்படுபவர்களையும் வைத்து அமைப்பை மறுசீரமைக்க வாய்ப்பு உள்ளது" என்கின்றனர்.

    Advertisement

    பாமக நிர்வாக மாற்றம்

    அதேநேரத்தில், கடந்த காலத்தில் ராமதாஸ் நியமித்த நிர்வாகிகள் கட்சி வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள் என்றால் அவர்கள் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ராமதாஸின் குடும்ப உறுப்பினர்கள் வகித்து வரும் சில முக்கிய பொறுப்புகளில் மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சும் கட்சிக்குள் நிலவுகிறது. இதனால், செயல் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் மாற்றம் வருமா, மாவட்ட நிர்வாகிகள் மறுசீரமைக்கப்படுவார்களா, அன்புமணி தலைமையில் புதிய நிர்வாக கட்டமைப்பு உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு பாமக வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

    English Summary

    PMK founder Ramadoss is reportedly handing key party responsibilities to Anbumani, triggering speculation over major organizational changes.