தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள்

  • சென்னை: "பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில் இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
    எதிரானது. இடைத்தேர்தலில் மீண்டும் அவர்கள் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது, தூய்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவில் இருந்து 25 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

    Advertisement

    விஜய்க்கு ஆதரவு அளித்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விஜய் அமைச்சரவையில் இடம் கொடுப்பார் என தகவல் வெளியானது. ஆனால் விஜய் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் விஜய்க்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்களில் 5 பேர் எடப்பாடியை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்தனர்.

    இந்ந்நிலையில், தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர். மதுராந்தகரம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். மூன்று பேருமே வேலுமணி - சிவி சண்முகம் தரப்பில் இருந்தவர்கள். எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்த மூவரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

    Advertisement

    இது அதிமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நடந்து முடிந்து 1 மாதம் தான் ஆகியுள்ளது. ரிசல்ட் வந்து 20 நாள் தான் ஆகிறது. எம்.எல்.ஏக்களாக பதவியேற்று 12 நாட்கள் தான் ஆகின்றன. அதற்குள், அதிமுகவின் 3 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு கட்சி தாவியுள்ளனர். இவர்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரவுள்ளது.

    இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த செயல்பாட்டைக் கண்டித்துள்ளன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.கவில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சனைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.

    Advertisement

    தவெகவின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?

    அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுநர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.

    Advertisement

    ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது." என வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    “The fact that the three AIADMK MLAs who resigned have joined the TVK runs counter to both the people's verdict and democratic principles. They should not be given the opportunity to contest again in the by-elections; if Chief Minister Vijay is committed to practicing clean politics, he must expel them from the party,” asserted PMK leader Anbumani.