சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிப்பதற்கு 70 ஆயிரம் கோடி ரூபாயில் சதி திட்டம் தீட்டப்படுகிறது எனவும், பள்ளிக்கரணை சதுப்பு நில ஊழல் விவகாரத்தில் தமிழக உயரதிகாரி ஒருவரின் நேரடி தலையீடு இருக்கிறது எனவும், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இதில் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக 2002-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம்.
பள்ளிக்கரணை சதுப்புநிலம் குறித்து தொடர்ந்து பேசுவதால் எங்களுக்கும் கடும் அழுத்தம் வருகிறது. கடந்த ஆட்சியில் இதுபோன்ற சதியை முறியடித்தோம். திமுக ஆட்சியில் ஒரு நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் மூலம் வழங்க முயற்சி நடைபெற்றது. அதனை பாமக தடுத்தது.
தற்போது பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை வரையறுப்பது தொடர்பாக 200 வகையான வரைபடங்களை முக்கியமான அதிகாரி ஒருவரிடம் கொடுத்தும், தனியார் கட்டுமான நிறுவனங்களின் நிலங்களைக் காப்பதற்காக அவற்றை அந்த அதிகாரி நிராகரித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம் குறித்து உயர் நீதிமன்றத்திலேயே தவறான தகவல்களைக் கொடுக்கக்கூடிய வகையில் தமிழக அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் வடிநிலமாகச் செயல்படும். பாமக ஒருபோதும் வளர்ச்சிக்குத் தடையாக இருக்காது. சுற்றுச்சூழலை அழித்து வளர்ச்சி வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். சதுப்புநிலத்தைச் சுற்றியுள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டாம் என நாங்கள் கூறவில்லை. சதுப்புநிலம் எது என்பதை முறையாக வரையறுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.21 கோடி உலக வங்கியில் கடன் வாங்கி நடைபாதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 10 அடி உயரத்திலும், 15 அடி அகலத்திலும் சாலை அமைத்துள்ளனர். அதில் நடைபாதையும் அமைத்திருக்கிறார்கள். அந்த இடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்ற நிலையில், அங்கு நடைபாதை எதற்கு? பளிங்குக் கற்கள் பதித்து நடைபாதை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தச் சாலைப் பணிக்கு உத்தரவிட்ட அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அதனை இடித்து அகற்ற வேண்டும். வெள்ள வடிநீரைத் தடுத்து நிறுத்திவிட்டால், அந்தப் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனங்கள் கட்டடங்களைக் கட்டிக்கொள்ளலாம் என்பதற்காகத் திட்டமிட்ட சூழ்ச்சி நடைபெறுகிறது. இது மிகப்பெரிய ஊழல். பிரிகேட் என்ற ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி தொடர்புடையதாக உள்ளது. மற்ற கட்டுமான நிறுவனங்கள் என மொத்தமாக ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் இது. இந்த ஆட்சியும் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ்வளவு பெரிய தவறு நடைபெறும்போது தமிழக வெற்றிக் கழக அரசு ஏன் சும்மா இருக்கிறது? முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தலையிட்டு சதுப்புநிலப் பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். முதலமைச்சர் விஜய் நிர்வாகத்திற்குப் புதியவர். எனவே, அரசு அதிகாரிகள் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாகக் கேட்கக்கூடாது. உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசியல், நிர்வாகம் இரண்டுமே அவருக்குப் புதிது. அதிகாரிகள் சொல்வதைக் கண்மூடித்தனமாக முதலமைச்சரும் அமைச்சர்களும் கேட்கக்கூடாது. முதலமைச்சர் விஜய் இதில் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சருக்கு ஏற்கெனவே இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளேன். பரந்தூர் போன்ற மிகப்பெரிய திட்டத்தை நிறுத்திய முதலமைச்சர், பள்ளிக்கரணை சதுப்புநிலம் அழிந்தால் சென்னை பாதிக்கப்படும் என்பதை ஏன் யோசிக்கவில்லை? முதலமைச்சர் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதிக்கும் நாளை பாதிப்பு ஏற்படலாம். இதுவரை முதல் தளம் வரை வெள்ளநீர் தேங்கியது. இனி இரண்டாம் தளம் வரை தேங்கும் நிலை ஏற்படலாம். தமிழ்நாட்டில் செயல்படாமல் உள்ள ஈரநில ஆணையத்திற்கு எதற்கு ஐஏஎஸ் அதிகாரி? அவர்களுக்கு எதற்கு ஊதியம்? உயர் பதவியில் இருக்கும் அந்த அதிகாரிகள் யார் என்பதை விரைவில் வெளியிடுவேன். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பல்வேறு வகையான போராட்டங்களை பாமக முன்னெடுக்கும். மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது. போக்குவரத்து நெரிசல், ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள், பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு அரசு அந்தத் திட்டத்தைத் தவிர்க்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்றால், சட்டப்பேரவையுடன் கூடிய தலைமைச் செயலகம் அமைக்க குறைந்தபட்சம் 100 ஏக்கர் தேவை. அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை இந்தியா முழுவதும் விலைவாசி உயர்ந்துள்ளது. அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்ததால் நாம் சற்று மூச்சுவிட முடிகிறது." என்றார்.அன்புமணி ராமதாஸ்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
நடைபாதை
திட்டமிட்ட சூழ்ச்சி
வராத விஜய்.. மாட்டிய ஆதவ் அர்ஜுனா.. தென் மாவட்டத்தில் பவர் சென்டராகும் நிர்மல்குமார்.. பின்னணி என்ன?
முதலமைச்சர் விஜய்
பரந்தூர் திட்டம்
கூண்டோடு தூக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. இனி விஜய் அலுவலகத்திலும் புதிய அதிகாரிகள்?
ஐஏஎஸ் அதிகாரி?
விலைவாசி