Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்?

  • தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கும் வேளையில், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம் சுமார் 9 விமான நிலையங்களை கட்டி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் முதலீட்டை ஈர்க்கவும் அடுத்த தலைமுறை வேலைவாய்ப்புகளை உருவாக்க விமான நிலையங்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்துகிறார் சந்திரபாபு நாயுடு.

    Advertisement

    உள்கட்டமைப்பு மற்றும் வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சியில் ஆந்திரப் பிரதேச மாநிலம் தற்போது எடுத்து வைக்கும் அதிரடி முயற்சிகள் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உற்றுநோக்க வைத்துள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அதிக நகரமயமாக்கப்பட்ட தொழில் துறை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிய போதிலும் விமான போக்குவரத்தை மேம்படுத்துவதில் பின்தங்கியுள்ளோம்.

    Advertisement

    சென்னை பரந்தூர்

    சென்னையில் இரண்டாவது விமான நிலையமாக அமையவிருந்த பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டம் பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் எதிர்ப்புகளால் முடங்கிக் கிடக்கும் இதே வேளையில், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 9 புதிய விமான நிலையங்களை உருவாக்குவதற்கான மெகா உள்கட்டமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் வான்வழிப் போக்குவரத்தை முற்றிலும் மாற்றியமைக்க ஆந்திரா களம் இறங்கியுள்ளது.

    ஆந்திராவின் மெகா 'ஏவியேஷன் மாஸ்டர் பிளான்'

    ஆந்திரப் பிரதேச அரசு தனது மாநிலத்தை இந்தியாவின் கிழக்கு பகுதியின் நுழைவாயிலாக (Eastern Gateway) மாற்றுவதை முக்கிய இலக்காக கொண்டுள்ளது. இதற்காக, ஜூன் 6, 2026 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 'ஆந்திரப் பிரதேச விமானப் போக்குவரத்துக் கொள்கை 2026-31' (APAP-2026) முறைப்படி அங்கீகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த பத்து ஆண்டுகால பழைய கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வான்வழித் தொடர்புகள், தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளை ஒன்றிணைக்கும் வகையில் இந்த புதிய வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரம்மாண்ட திட்டத்தின் கீழ் அமராவதி, குப்பம், தாகதார்த்தி, ஸ்ரீகாகுளம், தாடேபல்லிகூடம், நாகார்ஜுன சாகர், துனி-அன்னவரம், ஓங்கோல் மற்றும் பலாசா ஆகிய 9 முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அதிவேகமாக அமையவுள்ளன. இதேபோல் இந்த விமான நிலையங்களை அண்டை மாநிலங்களுக்கு அருகில் இருப்பது அடுத்த முக்கியமான விஷயமாக உள்ளது.

    150 கி.மீ ரேடியஸ் டார்கெட்

    தற்போதைய நிலவரப்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த வான்வழிப் பயணிகள் போக்குவரத்தில் ஆந்திராவின் பங்களிப்பு வெறும் 1.5 சதவீதம் மட்டுமே ஆகும். இது மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின் தங்கிய நிலையாகும்.

    Advertisement

    இந்த இடைவெளியை நிரப்பும் பொருட்டு, தங்களின் பங்கை 2035 ஆம் ஆண்டிற்குள் 4 சதவீதமாகவும், 2047 ஆம் ஆண்டிற்குள் 7 சதவீதமாகவும் உயர்த்த ஆந்திர அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய வருடாந்திர 6.2 மில்லியனாக இருக்கும் பயணிகளின் கையாளுதல் திறனை 30.38 மில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆந்திராவின் இந்த மாஸ்டர் பிளான் மூலம் ஒவ்வொரு சாமானியக் குடிமகனுக்கும் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் ஒரு விமான நிலையம் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை எட்ட, இந்த 9 புதிய விமான நிலையங்களுடன் சேர்த்து, மாநிலம் முழுவதும் பிராந்திய வாட்டர்டிரோம்கள் (Waterdromes) எனப்படும் நீர்நிலை விமான தளங்கள் மற்றும் சிறிய ஓடுதளங்களும் நவீனமயமாக மேம்படுத்தப்படவுள்ளன.

    Advertisement

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை?

    அண்டை மாநிலமான ஆந்திரா வான்வழிப் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளுதல் (Air Cargo) மூலம் பல்லாயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும், பல ஆயிரம் கோடி சர்வதேச முதலீடுகளையும் ஈர்க்கத் தயாராகிவிட்ட சூழலில், தமிழ்நாட்டின் நிலை கவலை அளிப்பதாக தொழில் துறையினர் கருதுகின்றனர்.

    இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தபோதிலும், சென்னைக்கு மிக அவசியமான பரந்தூர் போன்ற மெகா திட்டங்கள் தொடர்ந்து முடக்கப்படுவது மாநிலத்தின் எதிர்கால பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும்.

    English Summary

    Andhra Pradesh has approved plans for 9 new airports under its new aviation policy to boost connectivity and attract investment. In contrast, Tamil Nadu has stalled the crucial Parandur airport project, raising concerns over the state’s infrastructure growth and future economic competitiveness.