ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் மங்களகரமான மேள சத்தமும், உறவினர்களின் குதூகல டான்ஸுமாக மணமேடை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம். ஆனால், அந்த சந்தோஷமான ஊர்வலத்தின் நடுவே மணமகன் எடுத்த ஒரு பிடிவாதமான முடிவு, யாருமே எதிர்பாராத விதமாக ஒட்டுமொத்த கல்யாணத்தையுமே தலைகீழாக மாற்றிவிட்டது. இந்த செய்திதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பொதுவாக கடைசி நேரத்தில் ஒரு கல்யாணம் நின்றால், 2 குடும்பத்தினருக்கும் பெரும் மன உளைச்சலும், சமுதாயத்தில் பெரிய அவமானமும் ஏற்படும். திருமணத்திற்காக செய்யப்பட்ட மண்டபம், சாப்பாடு போன்ற அத்தனை ஏற்பாடுகளும் வீணாகி, லட்சக்கணக்கில் மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் உண்டாகும்.
மணமக்கள் 2 பேரின் எதிர்காலமும், அடுத்து அவர்களுக்கு வரப்போகும் வரன்களும் கூட இதனால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இத்தனை பாதிப்புகளும் ஏற்படும் என்று தெரிந்தும், மணமகளின் அப்பா இப்படியொரு சம்பவத்தை ஆந்திர பிரதேசத்தில் செய்துள்ளார். ஆந்திராவில் மார்க்கபுரம் அருகில் உள்ள கிராமம் சின்னகனிபள்ளி.. இங்கு வசித்து வருகிறார் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு மாப்பிள்ளை, பெண் இருவரையும் ஒரே வண்டியில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். சொந்தக்காரர்களும், ஊர் இளைஞர்களும் மேள சத்தத்துக்கேற்றபடி ஜாலியாக டான்ஸ் ஆடிக் கொண்டே வந்தார்கள். ஊர்வலம் பாதி தூரம் வந்ததுமே,அங்கிருந்த சிலர் மணமக்களை வண்டியிலிருந்து இறங்கி தங்களோடு சேர்ந்து டான்ஸ் ஆடக் கூப்பிட்டார்கள். புதுப்பெண்ணும் ஆசை ஆசையாக ஆட சம்மதித்தார். ஆனால், மாப்பிள்ளைக்கு இதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை. தனக்கு ஆட விருப்பமில்லை என்று சொன்னதோடு நிறுத்தாமல், எல்லோர் முன்னிலையிலும் மணப்பெண்ணை பார்த்து, "நான் மட்டும் டான்ஸ் ஆடறேன்.. நீ எல்லார் முன்னாடியும் ஆடக்கூடாது" என்று சொன்னார்.. அத்துடன், எல்லார் முன்பும் கத்தி சத்தம் போட்டார். இதைப் பார்த்த மணமகளின் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.. மாப்பிள்ளைக்கு வந்த கோபத்தை பார்த்து, மகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்பட்டார். "கல்யாணத்துக்கு முன்னாடியே, இத்தனை பேர் இருக்கிற இடத்திலேயே என் மகள் மீது இவ்வளவு கோபப்பட்டு அதிகாரம் பண்ணும் இந்த மாப்பிள்ளை, கல்யாணத்துக்கு அப்புறம் என் மகளை எப்படி நடத்துவாரோ?" என்று அவர் யோசித்தார். மகளின் எதிர்கால வாழ்க்கை இதனால் பாழாகிவிடுமோ என்று நினைத்தவர், உடனடியாக ஒரு முடிவை எடுத்தார்... தன்னுடைய மகளை அந்த ஊர்வல வண்டியிலிருந்து கீழே இறக்கினார். "இந்த மாப்பிள்ளைக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க மாட்டேன், இந்த கல்யாணமே வேண்டாம்" என்று சொல்லிவிட்டு, தன் மகளையும் சொந்தக்காரர்களையும் கூட்டிக் கொண்டு நேராக வீட்டிற்குப் புறப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 தரப்புமே மாறி மாறி தகராறு செய்தார்கள்.. இறுதியில் கல்யாணம் முழுமையாக நின்றது. ஏற்கனவே கல்யாணத்துக்காக நிறைய செலவு செய்திருந்த மாப்பிள்ளை வீட்டார், நடந்த சம்பவத்தாலும் நஷ்டத்தாலும் வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பிப் போனார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.ஆந்திர மாநிலம் - மணமக்கள்
மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம்
மணமகளின் அப்பா அதிர்ச்சி
புலம்பிய மணமகன் வீட்டார்