சென்னை ஓட்டல்களில் தங்கி முதலீட்டாளர்களை தூக்கும் ஆந்திரா! பறிபோகும் முதலீடுகள்! கீர்த்தனா வேடிக்கை

  • சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறையை, வளர்ச்சியை, பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை உலுக்கும் ஒரு பகீர் விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை, அவர்கள் தங்கியிருக்கும் சென்னை நட்சத்திர விடுதிகளுக்கே சென்று பேசி, அப்படியே வளைத்துப் போட்டு ஆந்திராவிற்குத் திருப்பிவிடும் அதிர்ச்சிகரமான ஆபரேஷன் ஒன்று அரங்கேறி வருவது தொழில் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு ஆலை சத்தியவேடு சென்றது, டிவிஎஸ் நிறுவனம் தனது 5.29 லட்சம் சதுர அடி அலுவலகத்தை பெங்களூருக்கு மாற்றியது, ₹7,000 கோடி ஹையர் நிறுவனம் கைநழுவியது, மற்றும் ஹூண்டாய்-கியா நிறுவனங்களின் ₹1,614 கோடி மதிப்பிலான மூன்று கொரிய உதிரிபாக ஆலைகள் ஆந்திராவின் அனந்தபூருக்குச் சென்றது எனத் தொடர் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், தலைநகர் சென்னையிலேயே தங்கியிருந்து முதலீடுகளை அண்டை மாநில அதிகாரிகள் லாவகமாகத் தட்டிச் செல்வது தவெக அரசின் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனாவின் செயல்பாடுகள் மீதும், முதல்வர் விஜயின் நிர்வாகக் கண்காணிப்பு மீதும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

    Advertisement

    நட்சத்திர விடுதிகள் போர்க்களமாக மாறியது எப்படி?

    தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வணிகத் திட்டங்களைத் தொடங்க விரும்பும் பன்னாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் அதிபர்கள், தங்களது முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் கிண்டி, எம்.ஆர்.சி நகர், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள முன்னணி ஐந்து நட்சத்திர மற்றும் சொகுசு ஓட்டல்களில் தங்குவது வழக்கம்.

    இதை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்துள்ள ஆந்திர மாநிலத்தின் சிறப்புப் பிரதிநிதிகள் குழு, அதே ஓட்டல்களில் சென்று ரகசியமாகத் தங்கி முகாமிடுகின்றனர். வெளிநாட்டுத் தொழில் அதிபர்களை அதே விடுதி வளாகத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்து, மிக வசீகரமான திட்டங்களை முன்வைக்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டை விட மிகக் குறைந்த விலையில் உடனடியாக நிலம், தடையற்ற மலிவான மின்சாரம், கூடுதல் வரிச் சலுகைகள் மற்றும் 24 மணி நேர ஒற்றைச் சாளர அனுமதி போன்றவற்றை உத்தரவாதமாகத் தருகின்றனர்.

    தமிழக அரசு அனுமதி தருவதற்குள் ஏற்படும் காலதாமதங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களின் மனதை மாற்றி முதலீட்டை ஆந்திரா பக்கம் திருப்பி விடுகின்றனர்.

    கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான உயர் மதிப்பு முதலீடுகள் ஆந்திர எல்லைக்கு மடைமாற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

    உளவுத் துறையும் அமைச்சகமும் என்ன செய்கின்றன?

    சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகளிலேயே இவ்வளவு பெரிய கார்ப்பரேட் வேட்டை வெளிப்படையாக நடக்கும் போது, தமிழக தொழில்துறை அமைச்சகமும், முதலமைச்சர் அலுவலகமும் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.

    Advertisement

    தமிழ்நாட்டிற்கு வரும் முதலீட்டாளர்களைக் கவனித்து, அவர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து திட்டங்களை இறுதி செய்ய வேண்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, மேலோட்டமான ஆய்வுக் கூட்டங்களுடன் நின்று விடுகிறார். அதை வீடியோவாக மாற்றி ரீல்ஸ் வெளியிடுவதோடு பணிகள் முடிந்து விடுகின்றன. முதலீட்டாளர்களை நேரடியாகக் கவர்ந்திழுக்கும் களப் பணிகளில் தவெக அரசு முழுமையாகத் தோற்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அண்டை மாநில அதிகாரிகள் நமது சொந்த வீட்டிற்குள்ளேயே நுழைந்து வாய்ப்புகளைத் திருடிச் செல்வதைக் கூடக் கண்டறிய முடியாத நிலையில் உளவுத்துறையும் அரசும் முடங்கிக் கிடக்கிறதா என்று பொருளாதார ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு பேராபத்து

    பன்னாட்டு நிறுவனங்களின் புதிய திட்டங்கள் மாநிலத்திற்குள் வரும் போதுதான் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் தொழில்துறைப் பட்டதாரிகளுக்கு ஆயிரக்கணக்கான புதிய வேலைகள் உருவாகும். ஆனால், வரும் வழியிலேயே முதலீடுகள் ஆந்திராவிற்குத் திருப்பி விடப்பட்டால், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்? எதிர்காலத்தில் தமிழக இளைஞர்கள் தொழிற்சாலைப் பணிகளுக்காக அண்டை மாநிலங்களுக்குப் புலம்பெயர வேண்டிய ஆபத்து வேகமாக நெருங்கி வருகிறது.

    முதல்வர் விஜய் இனியும் இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்காமல், உடனடியாகத் தலையிட்டுத் தொழில்துறையில் தீவிர மாற்றங்களைச் செய்ய வேண்டும். முதலீட்டாளர்களை அண்டை மாநிலங்கள் குறிவைப்பதைத் தடுத்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களை உடனடி அனுமதிகள் மற்றும் சலுகைகள் மூலம் பாதுகாப்பாகத் தக்கவைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தொழில்துறையில் தமிழ்நாடு அடைந்துள்ள பின்னடைவு சரிசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாக மாறிவிடும்.

    English Summary

    Andhra Team Camps in Chennai Luxury Hotels to Poach Global Investors: Hundreds of Crores Siphoned as TVK Govt and Minister Keerthana Sleep?