கோவை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட உள்ளதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாங்கள் அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறியுள்ள அண்ணாமலை, கட்சியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தனியாக வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். விரைவில் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக உருவெடுக்க இருக்கிறது. தற்போது அண்ணாமலை தொடர்ச்சியாக அமைப்பு ரீதியாக வலுவான கட்டமைப்பை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் உறுப்பினர் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது.
வீ தி லீடர்ஸ் அமைப்பில் தற்போது 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் வீ தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு என்று தனித்தனியாக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தேசிய அளவிலான பிரச்சாரமாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அடிப்படை மாற்றங்களை உருவாக்கவும், புதிய தலைவர்களை உருவாக்கவும் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதனால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே சிறந்தது. அப்போதுதான் எங்களின் சிந்தனை மற்றும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். நாங்கள் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி.. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அடிப்படை மாற்றங்களை கொண்டு வருவதில் தெளிவாக இருக்கிறோம். அரசியல் கட்சியின் பெயரில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தற்போது அரசியல் கட்சி பெயரை வெளியிடப் போவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இயக்கமாக கூட போட்டியிடலாம் என்று தெரிவித்தார். விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன் மக்கள் இயக்கமாக இருந்த போதும் உள்ளாட்சித் தேர்தலில் தான் நிர்வாகிகளை களமிறக்கி ஆழம் பார்த்தார். அதன்பின் உள்ளாட்சி தேர்தலில் வென்ற நிர்வாகிகள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதே பாணியில் அண்ணாமலையும் வேட்பாளர்களை அறிவித்து கட்சியின் கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.வெளிநாடு செல்வது ராகுல் காந்தியின் உரிமை.. தனிப்பட்ட பயணித்தை விமர்சிப்பது தேவையற்றது.. அண்ணாமலை