கோயிலில் செல்போனுக்கு தடை.. மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டையே கொளுத்திய கதை.. சாடிய அண்ணாமலை!

  • சென்னை: கோயில்களுக்குள் செல்ஃபோன் கொண்டு செல்லக் கூடாது என்ற நடைமுறை மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக இருப்பதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

    Advertisement

    இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 52 பெரிய கோயில்களுக்குள் பக்தர்கள் செல்ஃபோன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் செல்ஃபோனை கோயிலுக்கு வெளியில் வைத்து செல்வதற்காக பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டது. அண்மை காலமாக கோயில்களுக்குள் அதிகரித்து வரும் ரீல்ஸ் கலாச்சாரமே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

    Advertisement

    மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் ஏற்கனவே இந்த நடைமுறை இருந்து வருகிறது. பாதுகாப்பு பெட்டகத்தில் செல்ஃபோனை வைக்க ரூ.5 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. தவெக ஆட்சியில் இந்த நடைமுறை 52 கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    ஏனென்றால் திருவிழா போன்ற நேரங்களில் எப்படி இந்த நடைமுறையை பின்பற்ற முடியும். செல்ஃபோனை கொடுக்கவே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக பக்தர்கள் சாட தொடங்கினர். இதுதொடர்பாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.

    யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது. எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும்.

    Advertisement

    கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல என்று பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதம் எழுந்துள்ளது. இதனால் அறநிலையத்துறை இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.

    English Summary

    Annamalai: Annamalai Demands Withdrawal of Mobile Phone Ban in Temples, Citing Inconvenience to Devotees